பக்கம் எண் :

398தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

மேலும், சேலம், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்கள் மேலும் ஓங்கி நின்றது.
முதன்முதல் நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்தவன் இவன்றான்.
ஒவ்வொரு பாளையமும் ஒரு பாளையக்காரன் (படைத் தலைவன்) கையில்
ஒப்படைக்கப்பட்டது. பாளையக்காரர்கள் அனைவரும் அவரவர் ஆண்ட
பாளையங்களின்மேல் பரம்பரையுரிமை வழங்கப்பெற்றனர். அஃதுடன் காவல்,
நீதி வழங்குதல், வரி தண்டுதல் ஆகிய பொறுப்புகளும் பாளையக்காரரிடமே
ஒப்படைக்கப்பட்டன. பாளையக்காரன் தான் தண்டிவந்த வரித்தொகையில்
மூன்றில் ஒரு பங்கை நாயக்கனுக்குத் திறையாகச் செலுத்த வேண்டுமென்றும்,
மற்றொரு பங்கைக் கொண்டு படைகளைத் திரட்டி அவற்றை நிருவகித்து
வரவேண்டுமென்றும், மிஞ்சிய மூன்றாவது பங்கைத் தன் ஊதியமாகப்
பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நாயக்கனுக்கு ஒப்பந்தம்
செய்துகொடுத்தான்.

     விசுவநாதனின் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கன் (கி.பி. 1564-72)
தன் தந்தையைப் போலவே வீரத்திலும், திறனிலும் சிறந்து காணப்பட்டான்.
இவன் திருவிதாங்கூரின் மேலும், சிங்களத்தின் மேலும் படையெடுத்தான்;
வெற்றியும் பெற்றான். அமைச்சர் அரியநாதர் தொடர்ந்து கி.பி. 1570 வரையில்
பணியாற்றி வந்தார். முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனை யடுத்து அவன் மகன்
முதலாம் வீரப்பநாயக்கன் (1572-95) பட்டத்துக்கு வந்தான். அவனுடைய
ஆட்சியின்போது மதுரையில் ஜெசூட் பாதிரிகள் கிறித்தவ நிறுவனம் ஒன்றை
அமைத்தார்கள். இந் நிறுவனத்தைச் சார்ந்த பாதிரிகளுள் ராபர்ட்-டி-நொபிலி
என்பார் சிறந்து விளங்கினார்.

பிற்காலத்துப் பாண்டியர்கள்

     மதுரை விசுவநாத நாயக்கன் காலத்தில் தளவாய் அரியநாதர்
திருநெல்வேலிச் சீமையின்மேல் படையெடுத்துச் சென்றார். ஆங்குக்
கொள்ளையும், கொலையும் குழப்பமும் மலிந்து கிடந்தன. கயத்தாறு என்னும்
இடத்தைச் சுற்றிச் சில குறுநில மன்னர்கள் போருக்கு முனைந்து நின்றனர்;
இம் மண்ணுலகில் வேறு ஒரு மன்னனுடைய ஆட்சிக்குத் தாம்
அடிப்பணிவதில்லை என்று இறுமாப்புற்றிருந்தனர். அவர்கள் தம்மைப் பஞ்ச
பாண்டியர் எனக் கூறிக் கொண்டனர். அவர்கள் இன்னார் என வரலாற்று
ஆய்வுகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. பண்டைய பாண்டியருக்குத்
திறை செலுத்தி வந்த குறுநில மன்னர்கள் அவர்கள் எனச் சிலர் கூறுவர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிற்காலப்