பொருட்டு அவன் அடுத்தடுத்து மேற்கொண்ட போர்கள் அவனுக்குத் தோல்வியிலேயே முடிந்தன. இறுதியில் கிருஷ்ணப்ப நாயக்கனும் சிறைபிடிக்கப்பட்டான். ஜக்கனுடைய தம்பி எதிராசன் இராமதேவனுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தான். வேங்கடனின் பொய்மகன் 1619-ல் இறந்தான். எதிராசன் இராமதேவனுடன் இணைக்கமும் நல்லுறவும் ஏற்படுத்திக்கொண்டான்; தன் மகளையும் அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். போர்கள் ஓய்ந்தன. இராமதேவனின் ஆட்சியை மதுரை நாயக்கன் தவிர ஏனையோர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இராமதேவனுக்கு அவனுடைய மாமனாரான எதிராசன் துணையும், இரகுநாத நாயக்கனின் துணையும் கிடைத்தன. இராமராயனின் புதிய உறவுகளும் நட்புகளும் எச்சமனுக்கு உடன்பாடில்லை. ஆகவே, எச்சமன் பல போராட்டங்களில் ஈடுபட்டானாயினும் இராமராயனுடைய ஆதிக்கம் ஓரளவு எதிர்ப்பின்றி நிலைத்துவந்தது. பேரரசன் இராமராயன் தன் இருபத்தெட்டாம் வயதில் இறந்தான் (1630). அவன் தன் வாணாளில் முதலாம் சீரங்கனுடைய பேரனான பெத்த வேங்கடனை அரியணைக்கு உரியவனாக நியமனம் செய்திருந்தான். எனவே, அவன் இரண்டாம் வேங்கடனாக முடிசூட்டிக்கொண்டான் (1630-42). அவனுக்கும் தொல்லைகள் தீர்ந்தபாடில்லை. அரசுரிமைப் போராட்டங்கள் மீண்டும் எழுந்தன. வேங்கடனுக்கே வெற்றிகள் கிடைத்தன. அவன் பெனுகொண்டாவைக் கைவிட்டு வந்து வேலூரில் அமர்ந்து அரசாட்சி புரியலானான். செஞ்சி நாயக்கன் வேங்கடனிடம் அன்பையும் ஆதரவையும் சொரிந்து வந்தான். அதைக் கண்டு உள்ளம் கனன்ற தஞ்சாவூர், மதுரை நாயக்கர்கள் வேங்கடனைச் சிறைபிடிக்கப் பல சூழ்ச்சிகளில் ஈடுபடலானார்கள். இரண்டாம் வேங்கடனுக்குத் தம்பி மகனான சீரங்கன், தன்னுடைய பெரியப்பனுக்குச் சிறிது காலம் துணைகொண்டிருந்துவிட்டு எக் காரணத்தாலோ அவன்மேல் பகைமை பூண்டான். அவனுடைய உடந்தையின்மேல் பீஜப்பூர் ரந்தூலா கான் தெற்கில் வந்து வேலூருக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் தண்டு நிறுத்தினான். நாயக்கர் செய்த உதவியால் வேலூர்க் கோட்டையானது அவனுடைய தாக்குதலினின்றும் தப்பியது (1641). கருநாடகத்தில் நடைபெற்றுவந்த போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் தனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக ஏற்றுக்கொண்டான் கோல்கொண்டா சுல்தான். மெலிந்து |