சிதறுண்டுபோகும் நிலையில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்த விசயநகரப் பேரரசினின்றும் எட்டினவரையில் கைக்கொள்ள அவன் விரைந்தான். அவனை எதிர்த்துப் போராடும் வலியின்றி, துணையின்றி இரண்டாம் வேங்கடன் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராயணவரம் காடுகளில் ஓடி ஒளிந்தான். பல தொல்லைகளில் சிக்குண்டு உடலும் உள்ளமும் உளைந்துபோன வேங்கடன் கி.பி.1641-ல் இம் மண்ணுலகினின்றும் விடைபெற்றுக் கொண்டான். வேங்கடனுக்குப்பின் அவன் தம்பியின் மகன் மூன்றாம் சீரங்கனே பேரரசனாக முடிசூட்டிக்கொண்டான் (1642). மதுரை நாயக்கனும், தஞ்சை நாயக்கனும் அவனை எதிர்த்துக் கலகம் செய்தனர். கோல்கொண்டா சுல்தான் சீரங்கனுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டான்; தன் சேனாபதி மீர்ஜு ம்லா சீரங்கன்மேல் மேற்கொண்டிருந்த படையெடுப்பைத் தடுத்து நிறுத்திவிட்டான். மதுரைத் திருமலை நாயக்கனும், ஏனைய நாயக்கர்களும் ஒன்றுகூடித் தமக்குப் படைத்துணை அனுப்பி வைக்குமாறு பீஜப்பூர்ச் சுல்தானுக்கு விண்ணப்பம் அனுப்பிக்கொண்டார்கள். அச் சுல்தானும் வேலூரை நோக்கிப் படையொன்றை அனுப்பிவைத்தான். நாட்டையும், சமயத்தையும், கோயிலையும், பிராமணரையும் காப்பதற்குத் துணைபுரியுமாறு சீரங்கன் விடுத்துக்கொண்ட வேண்டுகோள் யாவும் இரக்கமற்ற நாயக்கரின் வன்செவிகளில் ஏறவில்லை. அவர்களிடமே சீரங்கன் தோல்வியுற்று (1645), வேலூக் கோட்டைக்குள் புகுந்து கொண்டு வரப்போகும் முஸ்லிம் தாக்குதலை எதிர்பார்த்து நின்றான். சுல்தானின் படைத் தலைவன் முஸ்தாபா கான் வேலூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டான். சீரங்கனுக்கு மட்டுமன்றித் தம் அனைவருக்குமே ஏற்படவிருந்த பேராபத்தை உயர்ந்தனர் நாயக்கர்கள். சீரங்கனுக்கு உதவி அனுப்ப அவர்கள் விரைந்தார்கள். மதுரைத் திருமலை நாயக்கன் மட்டும் ஒதுங்கி நின்றான். நாயக்கர்கள் துணை நின்றும், சீரங்கன் விரிஞ்சிபுரத்தில் நேர்ந்த போரில் (1646) தோல்வியுற்று மீண்டும் வேலூர்க் கோட்டைக்குள் புகுந்து கொண்டான். முஸ்லிம் தாக்குதல்கள் மேலும் கடுமையாயின. அவற்றைத் தாங்கிக்கொள்ளும் வலியின்றிச் சீரங்கன் கோட்டையைவிட்டு வெளியேறித் தஞ்சாவூர் நாயக்கனிடம் அடைக்கலம் புகுந்தான். செஞ்சியும் தஞ்சையும் பீஜப்பூருக்கு அடிபணிந்தன. உடனே சீரங்கன் மைசூருக்குத் தப்பியோடிச் சிறிது காலம் கொலுவமர்ந்து வாழ்ந்து வந்திருந்தான். அவன் அடைந்த இன்னல்களுக்கும் மீண்டும் வேலூர்க் கோட்டையைப் பிடிக்கக் கண்ட கனவுகளுக்கும் ஒரு முடிவு வந்தது (1675). |