பக்கம் எண் :

406தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     அலைபாய்ந்து கொண்டிருந்த அவன் நெஞ்சின் துடிப்புகள்
அடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு (1674) மராட்டிய வீரன் சிவாஜி
சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டான். விசயநகர மன்னர்கள் பொங்கி வந்த
முஸ்லிம் ஆதிக்கத்தை மலைபோன்று எதிர்த்து நின்று ஓய்ந்தார்கள். ஆனால்
அவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பின் ஆக்கமானது சிவாஜியின் கைகளில்
வளர்ந்து நற்பயனளிக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.

மதுரைத் திருமலை நாயக்கன் (1625-59)

     மதுரைத் திருமலை நாயக்கன் அரசியல் சூழ்ச்சிகளில் மிகவும்
கைதேர்ந்தவன். மைசூர் மன்னன் கந்தீரவனிடம் அடைக்கலம் புகுந்திருந்த
சீரங்கன் இழந்த தன் பேரரசை மீட்டுக்கொள்ளும் பொருட்டுப் பல
முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால், திருமலை நாயக்கனின் துரோகமும்,
சூழ்ச்சிகளும் குறுக்கே நின்று அவனுடைய முயற்சிகளை வீணாக்கின.
திருமலை நாயக்கனுக்கும் கந்தீரவனுக்குமிடையே பகைமை வளர்ந்து வந்தது.
திருமலை நாயக்கன் தன் பேரரசனான சீரங்கனுக்கு எவ்விதமான உதவியும்
செய்யாதவனாய் ஏமாற்றும் எண்ணத்துடன் காலந் தாழ்த்தி வந்தான் என்று
திருமலை நாயக்கன்மேல் கந்தீரவன் குற்றம் சாட்டினான். திருமலை
நாயக்கன்மேல் தான் கொண்டிருந்த வெறுப்பையும் பகைமையையும் மிகவும்
இழிவும், கொடூரமானதுமான ஒரு முறையில் அவன் காட்டிக்கொண்டான்.
பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவி
ஒன்றை வடித்துக்கொண்டான். அவனுடைய படை வீரர்கள் மதுரைச் சீமையில்
புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து மூட்டை மூட்டையாகக் கட்டி
மைசூருக்கு அவனுப்பித் தக்க பரிசும் பெற்றனர். திருமலை நாயக்கன்
அவனுக்குச் சளைத்தவன் அல்லன். அவனுடைய ஏவலின் பேரில்
அவனுடைய படைவீரர்களும் மைசூர்ச் சீமை எல்லைக்குள் நுழைந்து
மக்களின் மூக்குகளை மூட்டை மூட்டையாக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.
இக் கொடுமையான மூக்குப் போரைத் தொடக்கி வைத்த கந்தீரவனின்
மூக்கும் பறிபோயிற்று. மிகவும் இழிவான அருவருக்கத்தக்க, கேலிக்கூத்தான
இந்த மூக்குப் போரானது அக்கால அரசியலை இழிவு படுத்தியதுமன்றி,
அந்நியரான போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர் ஆகியவர்கட்கும், கிறித்தவப்
பாதிரிமார்கட்கும் கைத்தூக் காகவும் பயன்பட்டது.

     மைசூர்-மதுரை மூக்கறு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது
ராபர்ட்-டி-நொபிலி என்ற ரோமன் கத்தோலிக்கப்