பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 407

பாதிரியார் ஒருவர் மதுரையில் தங்கியிருந்து கிறித்துவ சமயப் பணிகளில்
மும்முரமாக ஈடுபட்டிருந்தார். நாட்டுக் குடிமக்களுடன் அவர் நெருங்கிப் பழகி
வந்தார். துறவி போலவே உடையுடுத்தித் தம்மை ‘ரோமாபுரி ஐயர்’ என்று
கூறிக் கொண்டார். மக்களுடைய பழக்கவழக்கங்களைத் தாமும் பயின்று,
அவர்களிடம் தாம் கண்ட கண்மூடிப் பழக்கங்களைப் புறக்கணிக்காமல்
அவர்களுடைய இதயங்களில் இடங்கொண்டார். அவர் வடமொழியையும்,
தமிழையும் நன்கு பயின்றார். அவருடைய எளிய துறவுக்கோலமும்,
தமிழ்மொழிப் பயிற்சியும் மக்களுடன் கலந்து உறவாடுவதற்குப் பக்கத்
துணையாக இருந்தன. அவர் இந்துக்களைப் போலவே வாழ்ந்து வந்ததைக்
கண்ட கிறித்தவர்கட்கு அவர்மேல் அழுக்காறும் ஐயமும் எழுந்ததுண்டு.

     திருமலை நாயக்கன் தன் ஆட்சி வரம்பின் விரிவுக்காகவும், புகழ்
தேடியும், திருவிதாங்கூரின்மேல் படையெடுத்தான் (1634-5). அப் போரில்
வெற்றிவாகை சூடி இராமநாதபுரம் சேதுபதியின் மேலும் போர் தொடுத்து
வெற்றி கண்டான். அவன் போர்ச்சுகீசியருடன் நட்புறவு கொண்டாடினான்;
ஆனால், டச்சுக்காரரை வெறுத்தான். கிறித்தவப் பாதிரிமார்களிடம் அவனுக்கு
மிக்க பரிவு உண்டு. நெஞ்சு உரத்திலும் போர்த் திறனிலும் திருமலை
நாயக்கன் மேம்பாடுடையவன். பெருங் கொடைவள்ளலாக அவன்
விளங்கினான்; கோயில் திருப்பணிகளிலும், அரண்மனைகள் கட்டுவதிலும்
பேரூக்கம் காட்டினான். வடமொழியில் பேரரறிஞராக விளங்கிய நீலகண்ட
தீட்சிதரைப் புரந்து வந்தான். அவர் புகழ்பெற்ற பல வடமொழி நூல்கள்
இயற்றியவர். அவர் ஆக்கிய கங்காவதாரணம், நளசரித நாடகம், நீலகண்ட
விசயம் என்னும் நூல்கள் வடமொழியில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்
பட்டு வந்தன. தஞ்சாவூரின் மராட்டிய மன்னன் இரண்டாம் ஷாஜியின்
அரசவைப் பண்டிதரான இராமபத்திர தீட்சிதருக்கு நீலகண்டன் குருவாக
விளங்கியவர்.

     திருமலை நாயக்கனுக்குப் பிறகு அவன் மகன் ஒரு சில மாதங்களே
அரசாண்டான். அவனையடுத்து அவன் மகன் முதலாம் சொக்கநாத நாயக்கன்
(1659-82) தன் பதினாறாம் ஆண்டில் அரசுகட்டில் ஏறினான். நல்லதொரு
ஆழ்நிலையில் அவனுடைய ஆட்சி தொடங்கிற்று. சொக்கநாதன் மதுரையை
விட்டுத் திருச்சிராப்பள்ளியைத் தன் தலைநகரமாக மாற்றிக் கொண்டான்
(1665). அவன் தஞ்சாவூரைக் கைப்பற்றினான்.