பக்கம் எண் :

மதுரை நாயக்கர்கள் 411

நிரம்பி வழிந்தன. அவ்விடங்களின் செல்வங்களைக் கொள்ளை
கொள்ளவேண்டுமென்று சிவாஜி எண்ணினார். செஞ்சியைக் கைப்பற்றி
ஆங்குத் தம் ஆதிக்கத்துக்கு அடிகோலி, அங்குக் கிடைக்கக்கூடிய
பொருளைக்கொண்டு முகலாயரின் அழிவுக்குப் போராடவேண்டுமென்றும்
சிவாஜி கருதினார் என்று தெரிகின்றது. அதுமட்டிலுமன்றி, மூன்றாம்
சீரங்கனுக்குப் பிறகு விசய நகரத்தைக் கைப்பற்றி அந்நாட்டின் பேரரசராக
முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் ஒன்றும் அவருடைய
நெஞ்சில் அரித்துக் கொண்டிருந்தது என்று ஊகிக்க இடமுண்டு.

     செஞ்சியில் நசீர் முகமதுவும், வலிகண்டபுரத்தில் ஷேர்கான்
லோடியும் அமர்ந்து அரசாண்டு வந்தனர். அவர்கள் பீஜப்பூரின் மேலாட்சிக்கு
உட்பட்டவர்கள். தஞ்சாவூரில் சிவாஜியின் மாற்றாந்தாயின் மகனான
வேங்காஜியும், திருச்சிராப்பள்ளியிலும் மதுரையிலும் சொக்கநாதனும்
ஆட்சியில் அமர்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் சுதந்தர மன்னர்கள்.
இவர்கள் ஒருவரோடொருவர் பூசலிட்டுக்கொண்டு, புதுச்சேரியிலிருந்த
பிரெஞ்சுக்காரரின் துணையை நாடினர். ஷேர்கான் பிரெஞ்சுக்காரரின்
நண்பன்; அவர்களுக்குப் புதுச்சேரியை வழங்கினவனும் அவனேயாவான்.
சிவாஜி தக்கதொரு சூழ்நிலையைக் கணித்து வந்தார். அவர் திடீர்ப்
படையெடுப்பு ஒன்றை மேற்கொண்டு மின்னல் வேகத்தில் கருநாடகத்துக்குப்
பாய்ந்து வந்து முதல் முற்றுகையிலேயே செஞ்சிக் கோட்டையைக்
கைப்பற்றினார்; வேலூர்க் கோட்டையை ஓராண்டு முற்றுகையிட்டு அதையும்
வென்று வாகை சூடினார். ஷேர்கான் திருவதிகையில் சிவாஜியால்
முறியடிக்கப்பட்டு நாட்டை விட்டோடிவிட்டான். அதன் பின்பு புவனகிரி
சிவாஜியின் வசமாயிற்று. அங்கிருந்தும் முன்னேறி, சிவாஜி கொள்ளிடக்
கரையில் தண்டடித்துத் தம் சகோதரன் வேங்காஜியுடன் தாயபாகப் பேச்சுகள்
நடத்தினார். வேங்காஜி எள்ளளவும் விட்டுக்கொடுக்க மனமில்லாதவனாய்த்
தஞ்சையினின்றும் தப்பியோடி மறைந்திருந்தான். சிவாஜிக்குப் பழம் நழுவிப்
பாலில் விழுந்தது. கொள்ளிடத்தின் வடகரையில் தாம் பிடித்த நாடுகளை
ஒழுங்குபடுத்தித் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். அவர் செஞ்சிக்குச்
சாந்தாஜி என்பவனைத் தம் பிரதிநிதியாக அமர்த்தினார். புதுச்சேரிக் கவர்னர்
மார்ட்டினிடம் தம் ஆதரவைச் சொரிந்தார். சாந்தாஜிக்கும் வேங்காஜிக்கும்
போர் விளைந்ததாயினும் அவர்கள் இருவரும் தமக்குள் ஒன்றுபட்டு
வாழ்வதற்கான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர்.