பக்கம் எண் :

430தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

தொகுத்து நூல் எழுதியவர்களுள் தலையாயவர் ஆபி டூபாய் (Abbe Dubois)
என்ற பாதிரியார் ஆவார். அவர் பிரெஞ்சு நாட்டினர்; 1770-ல் பிறந்தவர். தம்
வாணாளின் பெரும் பகுதியையும் அவர் தமிழகத்திலேயே கழித்தார்.
தமிழரிடையே கலந்து பழகி அவர்களைப்போலவே உண்டு உடுத்தி வந்தார்;
மக்கள் வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்து, ‘இந்துக்களின் பழக்க
வழக்கங்களும் சடங்குகளும்’ என்னும் நூல் ஒன்றை இயற்றினார்.
தமிழ்நாட்டிலேயே வாழ்ந்திருந்து அவர் அந்நூலை இயற்றினாராயினும் அவர்
அதில் கொடுத்துள்ள செய்திகளில் ஒருசில தவிர ஏனையவை அனைத்தும்
தமிழகத்தைப் பற்றியவையல்ல. அந் நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ள சில
நிகழ்ச்சிகள் கற்பனை எனத் தோன்றுகின்றன. பெண்கள் ஆயிரக்கணக்கில்
உடன்கட்டை ஏளினர் எனப் பல செய்திகளை அவர் கூறுகின்றார்.
மன்னர்களின் குடும்பங்களைத் தவிர ஏனைய குடிமக்களின் குடும்பங்களில்
பெண்கள் பெருமளவில் உடன்கட்டை ஏறியதாக வேறு சான்றுகள் ஏதும் இல.
எனினும், தமிழரின் சமுதாயமானது குலவேறுபாடு, பொருளற்ற சடங்குகள்,
எண்ணற்ற சிறு தெய்வ வழிபாடுகள், உயிர்ப் பலிகள் முதலிய கண்மூடிப்
பழக்கங்களினால் அலைப்புண்டும் பிரிவுபட்டும் காணப்பட்டது என்பதை அந்
நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

     கிறித்தவப் பாதிரிகள் சிலர் தம் நலனுக்காகச் செய்து வந்த ஆக்கப்
பணிகள் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் பலவிதங்களில் நன்மை பயந்தன.
அண்டிறீக் பாதிரியார் (1520-1600) என்பவர் தமிழகத்தில் முத்துக்குளி
துறையில் பரவமக்களிடையே சமயப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அவர்
ஜெசூட் மரபைச் சேர்ந்தவர். முதன் முதல் தமிழில் அச்சு எழுத்துகளை
வடிவமைத்த பெருமை இவரையே சாரும் (1577). அவர் கிறித்தவ சமயத்துடன்
தொடர்புகொண்ட தமிழ் இலக்கிய ஏடுகள் பல எழுதியுள்ளார். அவரைப்
போலவே ராபர்ட்-டி-நொபிலி என்ற ரோமாபுரிப் பாதிரியும் தமிழ்நாட்டில்
அடி வைத்த ஓராண்டுக்குள் தமிழ்மொழியை நன்கு பயின்றார். தலையில்
குடுமி வைத்துக்கொண்டார் ; பூணூல் அணிந்தார். அவர் மக்களுக்குத்
தமிழிலேயே விவிலிய போதனைகள் செய்து வந்தார். தமிழில் அவர் பல
உரைநடை நூல்களையும் வழங்கியுள்ளார்.

இலக்கியம்

     சோழர்கள் பரம்பரை மறைந்து பாண்டியரின் ஆட்சி தோன்றிப்
பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில் நாடு