பக்கம் எண் :

440தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

என்பர். இவர் இளமையிலேயே துறவு பூண்டார். இவர் பல பிரபந்தங்கள்
பாடினார். திருமலை நாயக்கன் வேண்டுகோளுக்கிணங்கி, மீனாட்சியம்மை
பிள்ளைத் தமிழையும், நீதிநெறி விளக்கம் என்னும் நீதிநூல் ஒன்றையும்
இயற்றினார். நீதிநெறி விளக்கம் திருக்குறளின் சுருக்கம் என்று போற்றப்பட்டு
வருகின்றது. ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ தமிழ் பயில்வோருக்கு ஒரு
விருந்தாகும். குமரகுருபரர் பாடிய கந்தர் கலிவெண்பா என்பது சைவ
சித்தாந்த நுட்பங்கள் அவ்வளவையும் சுருக்கமாகவும் தெளிவாகவும்
எடுத்துக்காட்டு கின்றது. குமரகுருபரருக்குத் தமிழ்மொழியினிடம் அளவு
கடந்த பற்றுதல் உண்டு. ‘தீஞ்சுவைக் கனியும் தண்தேன் நறையும், வடித்து
எடுத்த சாரம் கனிந்து ஊற்றிருந்த பசுந்தமிழ்’ என்றும், ‘நறை பழுத்த துறைத்
தீந்தமிழின் ஒழுகும் நறுஞ்சுவை’ என்றும் தமிழைப் பாராட்டியுள்ளார்.

     மதுரை நாயக்கர்கள் ஆட்சியில் அரசரும் குடிமக்களும் சமய
வாழ்க்கையில் பேரூக்கம் காட்டிவந்தனர். முன்னோர் வகுத்த ஒழுக்கநெறியே
மனிதன் இட்ட சட்டத்தைவிட மேம்பட்டதாகக் கொள்ளப்பட்டது. இராச்சியம்
பல நாடுகளாகவும், ஒவ்வொரு நாடும் பல மாகாணங்களாகவும்
பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு மாகாணம் என்பது பல ஊர்களையும்,
கிராமங்களையுங் கொண்ட ஒரு தொகுதியாகும்.

     பாளையக்காரன் செலுத்திய திறையும் நிலவரியும் மத்திய அரசாங்கத்தின்
சிறப்பான வருமானமாக இருந்தன. முத்துக் குளிப்பிலும் சங்கு எடுப்பிலும்
மத்திய அரசுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வந்தது. சோழர் காலத்துக்
கட்டணங்கள், வரிகள் பலவற்றை விசயநகரப் பேரரசர்களும், நாயக்க
மன்னர்களும் தொடர்ந்து தண்டி வந்தனர்.

     நாயக்க மன்னர்கள் குடிநலத்தை உண்மையாகவே பேணி வந்த
காவலராகக் காட்சியளிக்கின்றனர். பல துறைகளிலும் குடிமக்களுக்கு நல்வாழ்வு
அளிக்க முயன்றனர். ஆனால் போர்களும், வெள்ளமும், பஞ்சமும்,
நோய்நொடிகளும் மக்களை வாட்டி வந்தன. பெரிய நகரங்களைச் சுற்றியும்
அடர்ந்த காடுகள் மண்டிக் கிடந்தன. கான் விலங்குகளினாலும், வழிப்பறி
கொள்ளைக் கூட்டங்களினாலும் மக்களுக்கு இடும்பை விளைந்தன.
மதுரையைச் சுற்றி வளர்ந்திருந்த காடுகளில் புலிகளும், கரடிகளும்,
ஓநாய்களும் எண்ணற்றவை திரிந்து வந்தன. திருமலை நாயக்கன் புலி
வேட்டைக்கென நிவந்தங்கள் அளித்திருந்தான்.