பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 439

திருவள்ளுவர் என்ற பெயருடைய சித்தர் ஒருவரும் ஞானப் பாடல்கள் பல
பாடியுள்ளார். கருவூர்ச் சித்தர் முதலாம் இராசராசனுடன் தோழமை பூண்டவர்.
சித்தர்களுள் சிலர் சக்தி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். ‘வேதாந்த சித்தாந்த
சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணம்’ என்று தாயுமான சுவாமிகள்
இவர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார். சித்தர்கள் சமயத்துறையில் சமரசப்
போக்குடையவர்களாகவும் சில சமயம் குறுகிய சமயக் கொள்கைகளைக்
கடிந்தும் பாடியுள்ளனர். அகப்பேய், அழுகணி, குதம்பைச் சித்தர்கள் பாடிய
பாடல்கள் இசையோடு பாடும் போது நெஞ்சையுருக்கக் கூடியவை.
இராமதேவர் என்று ஒரு சித்தர் சதுரகிரியில் வாழ்ந்தவர். அரேபியாவில்
மெக்காவுக்குச் சென்று இஸ்லாம் மதத்தைத் தழுவி யாகோபு என்ற பெயரை
ஏற்றுக்கொண்டார். மருத்துவம், இரசவாதம் ஆகிய துறைகளில் இவர்
விரிவான நூல்கள் பாடியுள்ளார். இவர் பாடலில் துப்பாக்கி என்னும் சொல்
ஆளப்பட்டிருப்பதால் இவர் 14 அல்லது 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
எனக் கொள்ளலாகும். போகர் சீனநாட்டினர் என்றும், பழநி தண்டாயுதபாணி
திருவுருவத்தை நவபாடாணத்தில் சமைத்துக் கொடுத்தவர் என்றும் கூறுவர்.
பழநிக் கோயிலில் இவருடைய சமாதி என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டுவர்.

     சித்தர்கள் சித்திபெற்றவர்கள். சித்தர்கள் பூமியைத் தோண்டி உள்ளே
செல்லுபவர்கள் என்றும், வானத்தில் ஏறுபவர்கள் என்றும், கடலின்மேல்
காலினால் நடந்து செல்பவர்கள் என்றும் குறுந்தொகையில் ஒரு செய்தி
காணப்படுகின்றது.50 சித்தர்கள் காயசித்தி பெற்று ‘மரணப் பெரும்பிணி
வாராவகை’ கண்டவர்கள் என்றும், யோக முதிர்ச்சியினாலும் ஞான
நோட்டத்தினாலும் உடலியக்கத்தைக் குறைத்துக்கொண்டு, ஒளி வடிவம்
பெற்று, ஊன உடம்பை ஞான உடம்பாக்கி அதையே சிற்சபை அல்லது
ஞான சபையாகக் கொண்டு, நடராசப் பெருமானை அச் சபையில் ஐங்கூத்து
நிகழ்த்தச்செய்வதே சித்தர்களின் நோக்கம் என்று அவர்களின்
நூல்களினின்றும் அறிகின்றோம்.

     குமரகுருபர சுவாமிகள் மதுரைத் திருமலை நாயக்கன் உடன் காலத்தவர்
;சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர் ; சகலகலாவல்லி மாலை என்று
கலைமகள் புகழ் ஒன்று பாடி இந்தியும் கற்றார்

     50. குறுந். 130.