பக்கம் எண் :

438தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     அதிவீரராம பாண்டியன் காலத்திலேயே அவருடைய அண்ணன்
உறவினரான வரதுங்கராம பாண்டியன் என்பவர் அரசாண்டு வந்துள்ளார்.
அவரும் அவருடைய மனைவியும் இருவருமே மிகச் சிறந்த தமிழ்ப்
புலவர்களாக விளங்கினர். இம் மன்னர் பிரம்மோத்தர காண்டம், கருவைக்
கலித்துறை யந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா
அந்தாதி என்னும் நூல்களை இயற்றியுள்ளார். வரதுங்கன் முடிசூட்டு
விழாவின்போது கலியன் கவிராயர் என்பார் நாண்மங்கலம், குடைமங்கலம்
ஆகியவற்றைப் பாடி வாழ்த்தினார். மற்றொருவர் ஐயம்பெருமாள் சிவந்த கவி
என்பவர் புரூரவச் சக்கரவர்த்தி கதையை 920 பாடல்களில் பாடினார்.
அதிவீரராம பாண்டியன் சுவாமிதேவர் என்பவரையும், வரதுங்கராம

     பாண்டியன் வேம்பற்றூர் ஈசான முனிவரையும் தம் குருநாதர்களாகக்
கொண்டிருந்தனர்.

சித்தர் பாடல்கள்

     தமிழகத்தில் சித்தர் பலர் அவ்வப்போது ஆங்காங்கு வாழ்ந்து
வந்துள்ளனர். அவர்கள் ‘அழியாச் சித்தர்’ எனப் பாராட்டப்பட்டுள்ளனர்.49
சித்தர் திருமூலரின் ஞானபரம்பரையில் வந்தவர்கள் என அவர்களுள் சிலர்
கூறிக்கொள்ளுகின்றனர். சித்தர்கள் யாவர், அவர்கள் வாழ்ந்திருந்த காலம்
எது, அவர்கள் பாடிய பாடல்கள் யாவை, அவர்களுடைய சமயம் எது
என்னும் கேள்விகளுக்குத் தக்க விடை காண முடியவில்லை.
ஆயிரக்கணக்கான சித்தர் பாடல்கள் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன.
யோகம், ஞானம், மருத்துவம், காயகற்பம், இரசவாதம், சோதிடம், மந்திரம்,
இந்திரசாலம் ஆகிய துறைகள் யாவற்றிலும் சித்தர்கள் பாடியுள்ளார்கள்.
சித்தர்கள் பதினெண்மர் எனத் தொகுத்துக் கூறுவர். அத்தொகையில்
கோரக்கர் போன்ற வடநாட்டுச் சித்தர்களின் பெயர்களும் சேர்ந்துள்ளன.
சித்தர் பாடல்கள் பலவற்றுக்கு எளிதில் பொருள் காணவியலாது.
மறைபொருளான சொற்களைக் கொண்டு எளிய கருத்தை விளக்குவதும்,
எளிய சொற்களைக் கொண்டு மறைபொருள்களை விளக்குவதும் இவர்கள்
கையாண்ட இலக்கிய மரபாகும். சித்தர் வரிசையில் அகத்தியருக்கு முதலிடம்
அளிக்கப்பட்டுள்ளது. இடைக்காடர், உரோமர், கொங்கணர், கருவூரார்,
சட்டை முனி, நந்திநாதர், பிண்ணாக்கீசர், போகர், இராமதேவர் என்ற
யாகோபு ஆகியவர்களின் பெயர்களும் இவ் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

     49. திருவருட்பா. 6 ; 45-47