பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 437

வானமாமலை ஜீயர் முதலிய 72 சிம்மாசனாதிகளை ஏற்படுத்தியவர் மணவாள
முனிகள்தாம்.

     சோழ நாட்டு முகரி என்னும் ஊரினரான காரி என்பார் ‘கணக்கதிகாரம்’
என்னும் நூல் ஒன்று எழுதினார். தமிழகத்தில் தம் காலத்துப் பயின்றுவந்த
கணக்கியல் நுட்பங்களை இவர் இந் நூலில் விளக்கியுள்ளார். தமிழில்
ஏரம்பம், கினராலயம், அதிகாரம், கலம்பகம், திரிபுவன திலமம், கணித
ரத்தினம், சிறு கணக்கு ஆகிய கணக்கியல் நூல்களும் வழங்கி வந்ததாக இந்
நூலில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந் நாள் இந் நூல்கள் யாவும்
மறைந்தொழிந்தன.

     சோதிடம், மருத்துவம் ஆகிய துறைகளிலும் பல நூல்கள்
இயற்றப்பட்டன. தேரையர் என்பவர் மருத்துவ நூல்கள் எழுதியுள்ளார் ;
அறுவை மருத்துவத்திலும், நோய்த் தடைமுறைகளிலும், நோய் நாடும்
முறைகளிலும் மிகவும் ஆற்றல் படைத்தவர். இவர் பெயர் ‘தேரர்’ என்றும்
வழங்கி வந்தது. தேரையர் தமிழ்ப் புலமை சான்றவர் ; சந்தக் கவிகள் பாட
வல்லவர்.

     சடையவர்மன் பராக்கிரம குலசேகரன், நெல்வேலி மாறன் என்ற இரு
பாண்டியர் சீவல்லபனை அடுத்து அரசாண்டு வந்துள்ளனர். நெல்வேலி
மாறனின் தலைமகன் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் என்பவர் (1564-1604). இவருக்கு அழகன் சீவக வேள் என்றும் ஒரு பெயர் உண்டு. இவர் தம்
தந்தையின் நினைவாகத் தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் ஒன்று
எழுப்பினார். அதிவீரராம பாண்டியன் சிறந்த செந்தமிழ்ப் புலவர் ; நளன்
கதையைத் தமிழில் பாடியுள்ளார். நைடதம் என்னும் பெயருள்ள அந் நூல்
கற்பனை வளம், சொல்லழகு வாய்ந்தது. தமிழை முறையாகப் பயில்வோர்
தொடக்கத்தில் இந் நூலைப் பயில்வர். நைடத்தில் காணப்படும் கற்பனைகள்
கம்பராமாயணத்தை நினைவூட்டுவன. எக் காரணத்தாலோ இந்நூலின்
பிற்பகுதி கற்பனையும், சொல்லோவியங்களுமின்றி ஓடிவிடுகின்றது.
புகழேந்தியின் நளவெண்பாவுக்குப் பின்பு எழுந்த நளன் கதை இதுதான்.
நைடதம் விருத்தப்பாக்களால் ஆனது. அதிவீர ராமன் காசி காண்டம்,
கூர்மபுராணம், வாயு சங்கிதை, இலிங்கபுராணம் ஆகிய நூல்களையும்
இயற்றினார். இவர் பாடியுள்ள வெற்றி வேற்கை என்பது மிகச் சிறந்த
குழந்தை இலக்கியமாகத் திகழ்ந்து வருகின்றது.