| என்னும் விருத்தப் பா ஒன்று புலவர்களின் தனிச் சிறப்புகளை எடுத்துக் காட்டுகின்றது. கயாதரர் என்பவர் கயாதர நிகண்டு என்னும் நூலையும், சிதம்பரம் இரேவண சித்தர் என்பார் அகராதி நிகண்டு ஒன்றையும் இயற்றினார்கள். கடவுண் மாமுனிவர் என்பவர் மாணிக்கவாசகர் வரலாற்றை விரித்துத் திருவாதவூரர் புராணத்தை 545 செய்யுள்களில் பாடினார். மாணிக்கவாசகரைப்பற்றி இவர் கூறும் செய்திகளுக்கும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் கூறும் செய்திகளுக்கும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருப்பெருந்துறைப் புராணம் தரும் செய்திகளுக்கும் சிற்சில முரண்பாடுகள் உண்டு. தம் காலத்துக்கு முன்பு வழக்கில் காணப்படாத ‘தொப்பி’ என்னும் சொல்லைக் கடவுண் மாமுனிவர் ஆண்டுள்ளார். பதினைந்தாம் நூற்றாண்டில் சைவ சமய இலக்கியம் பெருவளர்ச்சி பெற்றது. காழிக் கண்ணுடைய வள்ளல் என்னும் சைவ முனிவர் ‘ஒழிவில் ஒடுக்கம்’ என்னும் ஞானநூல் ஒன்று பாடினார். இந் நூலுக்குப் போரூர் சிதம்பர சுவாமிகள் உரை ஒன்றை இயற்றியுள்ளார். இந் நூலை உரையுடன் வடலூர் இராமலிங்க சுவாமிகள் பதிப்பித்து வெளியிட்டார். சிவஞான வள்ளல் என்று மற்றொரு சைவ முனிவர் ‘வள்ளலார் சாத்திரம்’ என்னும் ஞான நூல் ஒன்றை வழங்கினார். மெய்கண்ட பரம்பரைச் சைவ சித்தாந்தத்துக்கும், இவருடைய சித்தாந்தக் கொள்கைக்கும் சிறிய வேறுபாடு உண்டு. தமிழில் முதன்முதல் அத்துவித வேதாந்தத்தைப் பற்றிய நூல்கள் இயற்றியவர் தத்துவராய சுவாமிகள். வைணவ மரபில் சிறந்து விளங்கியவர் மணவாள மாமுனிகள்; 1370-ல் பிறந்தவர்; இளமையிலேயே செந்தமிழ்ப் புலமையும் மெய்யுணர்வும் வாய்க்கப்பெற்றார். வைணவ சமயத்தில் தென்கலைப் பிரிவில் சிறப்பாக எண்ணப்படுபவர்கள் நம்மாழ்வார், இராமானுசர், மாமுனிகள் என்னும் மூவர் ஆவர் ; நம்மாழ்வாருடன் வைத்துப் போற்றப்படும் அளவுக்கு அவர் சிறப்புற்றிருந்தார். மணவாள மாமுனிகளுக்குப் பெரிய ஜீயர் என்றும், ஜீயர் என்றும் பெயர்கள் உண்டு. இவர் எழுதிய பிரபந்தங்களுள் மிகவும் போற்றப்பட்டு வருவது ‘திருவாய்மொழி நூற்றந்தாதி’ என்பதாகும். வைணவ சமயத்தைத் தமிழகத்தில் பரப்புவதற்கு |