| மணமகன் அம்மிமேல் எடுத்து வைத்தல், அவளுக்கு அருந்ததி காட்டுதல், மணமகன் அடிகளை மாமியார் பாலினால் கழுவுதல், மணமகளைத் தத்தம் செய்து கொடுத்தல் ஆகிய மணவினைகள் கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளன. காற்றாடிப் பட்டம் பறக்கவிடுதல், புனல் விளையாடுவது, கள் குடித்தல், கடாச்சண்டை செய்தல், யானைப்போர், கோழிப்போர் ஆகிய பொழுதுபோக்குகளில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். மக்கள் மகிழ்ச்சி மேலீட்டால் தம் மேலாடையை வானத்தில் வீசி எறிவதுண்டு. சில வீடுகளில் தரைக்கீழ் அறைகள் கட்டப்பட்டன. பவணந்தி முனிவரின் நன்னூலுக்குச் சிறந்த உரை எழுதிய மயிலைநாதரும், உரையாசிரியர்கள் அனைவரினும் தலைசிறந்தவர் எனக் கொள்ளப்படுபவரான நச்சினார்க்கினியரும், திருக்குறள் உரையாசிரியர்களுள் மிகச் சிறந்தவர் எனப் பாராட்டப்படும் பரிமேலழகரும் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். தமிழகத்தில் அவ்வையார் என்னும் பெயரில் சிறப்புற்ற பெண்பாற் புலவர்கள் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்திருந்தனர். அவர்களுள் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஒருவர். அவர் அவ்வை குறள், விநாயகர் அகவல் என்னும் யோகநெறி நூல்களை இயற்றிச் சிறப்புற்றவராவார். காளமேகம் என்ற சிறப்புப் பெயர் பெற்ற மாபெரும் புலவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பல கோயில்களுக்கும் சென்று பாடல்கள் பாடினார். இவர் எடுத்த எடுப்பில் விரைவாக ஆசு கவிகள் பாடும் திறமையும், புலமையும் வாய்ந்தவர்; எதையும் பொருட்படுத்தாமல் பிறருடைய குற்றத்தை எடுத்துக் காட்டி அதைக் களையும்பொருட்டுப் பாடல்கள் பாடுவார்; வசை பாடுவதிலும், வஞ்சப் புகழ்ச்சி பாடுவதிலும் ஆற்றல் படைத்தவர். ‘வெண்பாவிற் புகழேந்தி ; பரணிக்கோர் சயங்கொண்டான் ; விருத்த மென்னும் ஒண்பாவிற் குயர்கம்பன் ; கோவை உலா அந்தாதிக் கொட்டக் கூத்தன் ; கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் ; வசைபாடக் காள மேகம் ; பண்பாக உயர்சந்தம் படிக்கா சலாதொருவர் பகரொ ணாதே.’ |