பக்கம் எண் :

434தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     அருணகிரிநாதர் சந்தம் பாடி வில்லிபுத்தூராரை வென்றார் என்பர்.
ஆனால், அக் கருத்துக்குச் சான்றுகள் இல. அருணகிரிநாதர் காலத்தில்
சாக்தரின் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது. அது நாளடைவில்
சித்தர்களின் சமயமாக மாறிவிட்டது. சாக்த வழிபாட்டினரான சம்பந்தாண்டார்
என்ற ஒருவரை அருணகிரிநாதர் வாதிட்டு வென்று அடக்கினார் என்று
செவிவழி வரலாறு ஒன்று உண்டு. அருணகிரிநாதர் 16,000 திருப்புகழ்ப்
பாடல்கள் பாடினார் என்பர். இப்போது எஞ்சியுள்ளவை 1304
பாடல்களேயாம். அவற்றைத் தேடிக் கண்டு பிடித்து, கோவைப்படுத்தி
அச்சிட்டுதவியவர் வ. த. சுப்பிரமணிய பிள்ளை என்பார் ஆவார்.

     திருப்புகழ்ப் பாடல்கள் சொற்சுவையும், இசை வளமும், தாளக்கட்டும்
பொருந்திய சந்தப் பாடல்களாம். தமிழ் வண்மை, செய்யுள் மிடுக்கு, தொடை
நயம், சந்த ஒலிகள், கற்பனையாற்றல், இதயக் கசிவு ஆகியவை இவருடைய
பாடல்களில் ஒருங்கே பொலிவுறுவதைக் காணலாம். அருணகிரிநாதர்
கந்தரந்தாதி, கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திரு வகுப்பு
முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். பத்துப்பாட்டில் முதலில்
வைக்கப்பட்டுள்ள திருமுருகாற்றுப்படையில் திருவேரகம் என்னும்
படைவீட்டைச் சுவாமிமலை என்னும் ஊர் எனக் கொண்டு அருணகிரிநாதர்
பாடியுள்ளார்.

     காஞ்சிபுரத்தில் குமரக்கோட்டத்தில் அருச்சகராக இருந்த கச்சியப்ப
சிவாசாரியார் 10,346 விருத்தப் பாடல்களில் கந்த புராணம் என்று ஒரு நூல்
பாடினார். அது மாபெருங் காவியங்களுள் ஒன்றெனப் பாராட்டப்படுகின்றது.
அது கற்றவர்கள் கருத்தைக் கவர்வது. ‘கந்த புராணத்தில் இல்லாதது எந்தப்
புராணத்திலும் இல்லை’ என்று ஒரு பழமொழி எழும் அளவுக்குப்
பொருட்செறிவு கொண்டது. இப் புராணம் முருகக்கடவுளின் கதையை
விரித்துரைக்கின்றது. சைவசித்தாந்தத்தின் தத்துவங்கள் இந்நூலில் பல
இடங்களில் கதைப் பாத்திரங்களின் வாயிலாக விளக்கப்படுகின்றன.
கந்தபுராணம் ஒரு கலைக்களஞ்சியமாகக் காட்சியளிக்கின்றது.

     கச்சியப்ப சிவாசாரியார் காலத்தில் காணப்பட்ட பல பழக்கங்கள் இந்
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. குளத்தில் நீருக்குள் ஈட்டிகளை நாட்டித்
தலைகீழாக அதில் விழும் வழக்கம் காஞ்சிபுரத்தில் இருந்தது. அதற்குக்
‘கருமாறிப் பாய்தல்’ என்று பெயர். திருமணத்தில் மணமகளின் காலை