| வில்லிபுத்தூரார் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்திருந்தவர் எனக் கொள்ளுவதற்கு இடமுண்டு. இரட்டைப் புலவர்கள் வில்லிபுத்தூராரின் காலத்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்தே பாடல்கள் இயற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவர்களுள் ஒருவர் குருடர் ; மற்றவர் முடவர். முடவரைக் குருடர் தம் தோளின் மேல் ஏற்றிச் சொல்லுவார். இவ்விருவரும் மிகவும் ஆழ்ந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள். இவர்களைப்பற்றி நிலவும் செவிவழிக் கதைகள் பல. இவர்களுடைய பாடல்களில் நகைச்சுவையும் பொருள் நயமும் ததும்பி வழியும். திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம், ஏகாம்பரநாதர் உலா, ஏகாம்பரநாதர் வண்ணம், மூவர் அம்மானை, கச்சிக் கலம்பகம், கச்சியுலா ஆகிய பிரபந்தங்களையும் பல தனிப் பாடல்களையும் இவர்கள் பாடியுள்ளனர். வில்லிபுத்தூராரின் உடன்காலத்தவர் அருணகிரிநாதர். இவரைப் பற்றிய வரலாறுகள் பல உண்டு. ஒன்றுக்கேனும் சான்றுகள் காணப்படவில்லை. இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர் ; பிரபுடதேவராயன் என்ற ஒரு விசயநகர மன்னன் காலத்தவர். இவர் ஊர்தோறும் சென்று முருகர்மேல் அழகிய, இனிய தமிழில் புகழ்மாலைகள் சாத்திவந்தார். இவருடைய பாடல்களுக்குத் ‘திருப்புகழ்’ என்றே பெயர் வழங்கி வரலாயிற்று. அருணகிரிநாதர் காலத்தில் தேவரடியார்கள் கோயில் திருத்தொண்டுகளைக் கைவிட்டுத் தம் உடல் அழகை விற்றுப் பிழைக்கும் அளவுக்குத் தம் நிலையில் இழிந்துவிட்டனர். முஸ்லிம்கள் படையெடுப்புகளினாலும், தமிழகத்து மன்னர்களும் குறுநில மன்னர்களும் விளைத்த குழப்பங்களினாலும், தெலுங்கர் கன்னடியர் செல்வாக்குப் பெற்று வந்ததாலும் தேவரடியார்கட்குச் சோழ பாண்டிய மன்னர்கள் வழங்கி இருந்த நிவந்தங்கள் பறிபோயின போலும். தேவரடியார்கள் தம் உடைமைகளை இழந்து, பிழைக்க வழியொன்றைத் தேடிக்கொண்டதில் வியப்பேதுமின்று. கோயில் பணிகளுக்கும், சிறப்பாகத் தம் பிழைப்புக்காகவும் தேவரடியார்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அருணகிரிநாதர் தம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் முற்பகுதியில் தாசிகளின் உறவினால் நேரிடும் கேடுகளை மிக விரிவாக விளக்குகின்றார். பட்டினத்தார் போன்றவர்களும், பிறகு வந்த சமயத் தலைவர்களும் ‘பெண்களைப் பழித்தல்’ என்னும் மரபு ஒன்றைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். |