| வில்லிபுத்தூராரை ஆழ்வார் என்றே அழைப்பர். வரந்தருவார் என்று வில்லிபுத்தூராருக்கு ஒரு மகன் இருந்தார். அவரும் புலமை சான்றவர் என்பது தம் தந்தையின் நூலுக்கு அவர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தால் அறிகின்றோம். வடமொழிப் பாரதம் பதினெண் பருவங்கள் கொண்டது ; வில்லியின் பாரதமோ பத்துப் பருவங்களில் முற்றுப் பெறுகின்றது. இந்நூல் சுமார் 4351 பாடல்களால் யாக்கப்பட்டது. இதில் வில்லிபுத்தூரார் தமிழ்ச் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் இணைத்து இணைத்துப் பாடியுள்ளார் ; எனினும், வடமொழிச் சொற்கள் யாவும் ஓசையில் குன்றியும், மெலிந்தும், நெகிழ்ந்தும் தமிழ்ச் சொற்களுடன் கரைந்துவிடுகின்றன. சந்தப் பாட்டுகளைப் பாடுவதில் வில்லிபுத்தூராருக்கு இணை அருணகிரிநாதர் ஒருவரைத்தாம் காட்டமுடியும் ; நாடு நகர வர்ணனைகளிலும் கிளைக் கதைகளிலும் சொற்களையும் காலத்தையும் சிதறவிடாமல் நூல் தொடக்கத்திலேயே கதையையும் தொடங்கிவிடுகின்றார் இந் நூலாசிரியர். வில்லிபுத்தூராழ்வார் வைணவராயினும் பாரதக் கதையின் இடையிடையே சிவபெருமான் புகழை வாயாரப்பாடுவது இந்நூலின் தனித்த ஒரு சிறப்பாகும். பாரதக் கதையை இவர் பல மெய்ப்பாடுகள் தோன்றும்படி நாடக அரங்கின் காட்சிகளாக அமைத்துள்ளார். மக்களின் மனோதத்துவத்தை இவர் நன்கு உணர்ந்தவராகக் காணப்படுகின்றார். நம் நெஞ்சில் எழும் பலவகையான உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொண்டு அவற்றின் மாறுபாடுகளுக்கு ஏற்பத் தம் நூலில் படலத்துக்குப் படலம் திடீர்த் திருப்பங்கள் அமைத்தும், சொற்களைக் கோத்தும், சந்த வகைகளைக் கையாண்டும் கதையை விறுவிறுப்பாகவும், துரிதமாகவும் ஓட்டிச் செல்லுவது வில்லிபுத்தூராருக் கெனவே அமைந்துள்ள ஒரு தனிச் சிறப்பு எனலாம். வில்லியின் பாரதம் பதினெட்டு நாள் பாரதப் போர்முடிவுடன் முற்று பெறுகின்றது; பத்துப் பருவங்களில் அமைந்துள்ளது. இறுதி எட்டுப் பருவங்களையும் இவர் பாடினார் எனவும், அவை இப்போது மறைந்தொழிந்தன எனவும் சிலர் கூறுவர். ஆனால், நூலின் அமைப்பு அதற்கு மாறாகக் காணப்படுகின்றது. அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர் என்பவர், பதினெட்டாம் நூற்றாண்டில் 2477 செய்யுள்கள் தாமே பாடிச் சேர்த்து வில்லியின் பாரதத்தை முடித்தார். சென்ற நூற்றாண்டில் நல்லாப் பிள்ளை என்பவர் முருகப்பிள்ளை என்பவருடன் இணைந்து 11,000 செய்யுள்கள் பாடிச் சேர்த்து வில்லியின் பாரதத்தை விரிவுபடுத்தியுள்ளார். |