| தம்தம் நிலங்களில் பெற்ற வருமானத்தைக்கொண்டு பெரிய பெரிய நகரங்களில் குடியேறி இன்பவாழ்க்கை துய்த்து வரலானார்கள். அவர்கள் தம் நிலங்களுக்கு ஊட்டங்கொடுத்துத் தரமான விதைகளை விதைத்து விளைவைப் பெருக்குவதற்கு ஊக்கங் காட்டினார்கள் இல்லை. நிலவரி தண்டுவதற்காகவே நாயக்க மன்னர்களாலும் ஆங்கிலேயராலும் நியமிக்கப்பட்ட ஜமீன்தாரர்களும், ஜாகீர்தாரர்களும் தாமும் முடிசூடிய மன்னர்களைப் போலவே நாடாண்டு, அளவற்ற பகட்டிலும் ஆடம்பரத்திலும் வாழ்க்கையைப் போக்கிவந்தனர். குடிவளத்தின் வளர்ச்சியில் அவர்கள் சிறிதேனும் கருத்தைச் செலுத்தவில்லை. இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு நில உரிமைகள் ஒரு சிலர் கைகளில் குவிந்து கிடந்ததையும், பெரும்பாலரான உழவர்கள் தமக்கென உழவு நிலங்கள் இன்றியே தவித்துக்கொண்டிருப்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசாங்கங்களுக்கு ஏற்பட்டது. தமிழ்நாட்டு அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்சவரம்பு ஒன்று விதித்தது. அதன்கீழ்க் குடிமக்கள் யாவரும் பதினைந்து ஏக்கர்களுக்குமேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம் வகுக்கப்பட்டது. நிலமின்றி வருந்திக்கொண்டிருந்த குடிமக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் குடிநலச் சமுதாயம் ஒன்று உருவாவதற்கு வேண்டிய அரசியல் திட்டங்கள் பல வகுக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்களும் மடங்களும் தம் வருமானத்தைக் கல்வி வளர்ச்சியிலும், சமயத் தொண்டுகளிலும், இலக்கியப் பெருக்கத்திலும் திருப்பிவிட்டிருக்கின்றன. ஆயுள் காப்பீட்டுக் கழகங்களும், வங்கிகளும் இந்திய அரசால் நாட்டு உடைமைகளாக்கப்பட்ட பிறகு, அவற்றினிடம் முடங்கிக் கிடந்த நிதிகள் குடிவளர்ச்சியின் ஆக்கப்பணிகளுக்குச் செலவிடும் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சாலை அமைப்பானது விரிவாகி உள்நாட்டுக் கிராமங்களுக்கெல்லாம் பயன் அளித்து வருகின்றது. ஏறக்குறைய, தமிழ்நாட்டுக் கிராமங்கள் அனைத்தினுக்குமே இப்போது மின்னாற்றல் அளிக்கப்பட்டுவிட்டது. குடிசைகளுக்கு மின்வழங்கும் திட்டமும் செயல்பட்டு வருகின்றது. அதனால் கிராமங்களில் குடிநீர், பாசனநீர் வசதிகளும், சிறுதொழில் நிறுவனங்களும் பெருகிவருகின்றன. உள்நாட்டு நூலக நிறுவனம் அமைக்கப்பட்ட பிறகு கிராமங்கள் எல்லாவற்றிலும் விரும்பிய நூல்களை வாங்கிப் |