பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 535

படித்துப் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வானொலியும்,
செய்தித்தாள்களும், திரைப்படங்களும் எட்டாத கிராமங்களே தமிழகத்தில்
இல்லை எனலாம். சென்னையில் தொலைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மற்ற
இடங்களிலும் விரைவில் அமைக்கப்படலாம். குடிநல வளர்ச்சி, சமுதாய
வாழ்க்கைச் சீர்திருத்தங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலுமே இந்தியா
முழுவதிலும் தமிழ்நாடு தலையாய இடத்தில் நின்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையை அரிக்கக்கூடிய அல்லது பிளக்கக்கூடிய
தீய பூசல்களோ, சுயநல இயக்கங்களோ காணப்படாமை பெரிதும் பாராட்டக்
கூடியதாகும். அஃதுடன் அவ்வப்போது அமைந்துவரும் அரசாங்கங்களும்
பெரும்பாலான குடிமக்களின் ஆதரவைப் பெற்று உறுதியாக இயங்கி
வந்துள்ளன. ஆகையால், அரசியலில் குழப்பங்களும், திடீர்த் திருப்பங்களும்
ஏற்படுவதில்லை. குடிநல வளர்ச்சிக்கும், பொதுநலச் சமுதாயத் திட்டங்கள்
வெற்றியுடன் செயல்படுவதற்கும் இது நல்ல, ஏற்றதொரு சூழ்நிலையாகும்.

     கல்வி வளர்ச்சியில் மிகப் பெரியதொரு முன்னேற்றம் காணப்படுகின்றது.
கலைக் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும், பொறியியற் கல்லூரிகளும்,
பள்ளிகளும், உயர்தரக் கல்வி நிலையங்களும் சென்ற ஐந்தாறு ஆண்டுகளில்
பன்மடங்கு பெருகி வந்துள்ளன. தமிழ்நாட்டில் இப்போது வேளாண்மை
வளர்ச்சிக்கெனத் தனியாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒன்று
கோயமுத்தூரில் தொடங்கப் பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப்
பல்கலைக்கழகம் ஒன்றும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.கோவையில்
பாரதியார் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றும், திருச்சிராப்பள்ளியில்
பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றும் தொடங்க ஏற்பாடுகள்
நடைபெற்று வருகின்றன.

     அடிமை நிலையினின்றும் விழித்தெழுந்து, சுதந்தரம் பெற்றுப் புதிய குடி
உரிமைகளை அனுபவிக்கத் தொடங்கும் மக்கள் இன்பங்களைக் காண்பதும்,
அவற்றை உழைப்பின்றியே துய்க்க அவாவுவதும், அதற்காக அவர்கள்
முயன்று வெற்றி பெறுவதும், தம் முயற்சியில் தோற்றவர்கள் துவண்டு
போவதும் இயல்பேயாம். இது மக்கள் சமுதாயத்தைப் பற்றும் நோய்களுள்
ஒன்றாகும். இந் நோய் தமிழ்நாட்டுச் சமுதாயத்தையும்
பற்றிக்கொண்டிருக்கின்றது. வரலாறு ஒருமுறைதான் நிகழ்கின்றது. கிடைத்த
வாய்ப்பைக் கைப்பற்றுவதும், நழுவ விடுவதும் குடிமக்கள் கைகளிற்றான்
உள்ளது. இதைத் தமிழர்