| பேசி இலக்கியப் பற்றையும், சமயப் பற்றையும் அவர்களுக்குப் புகட்டும் திறன் இவருக்கு உண்டு. காந்தியடிகளார் தொடங்கிய அறப்போரில் பல தேசிய வீரர்கள் முழுமூச்சுடன் இறங்கினார்கள். அவர்களுள் வ.உ.சிதம்பிரம் பிள்ளை, கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் ஆகிய இருவரும் முன்னணியில் நின்றவர்கள். சிதம்பரம்பிள்ளை ‘கப்பலோட்டிய தமிழர்’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளார். ஆங்கிலேயரின் ஆணைகளை எதிர்த்து நின்று தாமே சொந்தமாகக் கப்பல்கள் வாங்கி ஓட்டிச் சிறை சென்றார். அரசியலில் ஈடுபட்டவராயினும் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் இவர் பெரிதும் ஈடுபட்டிருந்தார். சுப்பிரமணிய பாரதியார் தமிழ் இலக்கியத்துறையில் பெரும் புரட்சி ஒன்றையே தோற்றுவித்து என்றும் பொன்றாத புகழைப் பெற்றுவிட்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுதந்தர வேட்கையைத் தூண்டிவிடக்கூடிய பல பாடல்களைப் பாடித் தமிழரை அடிமை உறக்கத்தினின்றும் தட்டி எழுப்பினார். இவருடைய தேசியப் பாடல்களும், கண்ணன் பாட்டுகளும், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகிய கவிதைகளும் தமிழரின் உள்ளத்தில் என்றும் அழியா இடம் பெற்றுவிட்டன. அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மேன் படைத்தளித்துள்ள உரைநடைச் செய்யுள்களைப் பாரதியாரும் எழுதியுள்ளார். ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே; எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்று தொடங்கும் பாட்டினால் தமிழ்மொழிக்குச் சிறந்ததோர் ஏற்றஞ் செய்ய வந்தவர் பாரதியார். சித்தர்களும், இராமலிங்க அடிகளாரும் கையாண்ட புதிய செய்யுள் முறைகளைப் பாரதியாரும் கையாண்டு தம் உணர்ச்சிப் பெருக்கையும், எண்ணங்களின் செறிவையும் அவை ஏந்தி நடக்குமாறு பாடல்கள் பாடினார். சக்தி வழிபாட்டில் பாரதியாருக்கு நல்ல ஈடுபாடு உண்டு. பாரதியாரின் வழியில் வந்த தேசியக் கவிஞர்களுள் தலை சிறந்தவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களாவார். காந்திய இயக்கத்துக்குப் புத்துணர்வு ஊட்டி மக்களைத் தேசப் பணியில் ஈடுபடச் செய்த அவரது பாடல்கள் நெஞ்சை உருக்கும் தகையனவாகும். காந்திஜியை வள்ளுவரின் வடிவாகக் கண்டு அவர் காந்தியைப் பற்றியும், காந்தியத்தைப் |