பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 539

     இவ்விருபதாம் நூற்றாண்டில் வியப்பூட்டும் இலக்கியப் பணியைச்
செய்தவர் பண்டிதை அசலாம்பிகையம்மையார் ஆவார். இவர் காந்தி
புராணம், திலகர் மான்மியம், வள்ளலார் சரித்திரம் ஆகிய நூல்களை
ஆக்கியுள்ளார். இவற்றில் வரும் செய்திகள் அனைத்தும் இக்காலத்தவை.
ஆனாலும், பழைய இலக்கிய இலக்கண மரபு வழுவாது இந் நூல்கள்
ஆக்கப்பட்டுள்ளன. காந்தியடிகளாரைப் பின்பற்றி, இந்திய தேசியப்
போராட்டங்களில் கலந்துகொண்டு வீரச்செயல்கள் புரிந்த தலைவர்களையும்,
காந்தியடிகளின் அறப்போரையும் அம்மையார் பாடியுள்ள சிறந்த முறையானது
தமிழ் இலக்கியத்தைப் பல படிகள் உயர்த்திவிட்டதெனலாம்.

     கோ. வடிவேலு செட்டியார், உயர்நிலைப்பள்ளி யொன்றில்
தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ‘லோகோ பகாரி’ என்றொரு
வார ஏட்டை வெளியிட்டு வந்தார். இவர் வேதாந்தத் துறையில் சீரிய
தொண்டுகள் புரிந்து வந்தார். பல வேதாந்த நூல்கள் எழுதியுள்ளார்.
இவருடைய திருக்குறள் பதிப்பு மிகச் சிறந்ததொன்றாகக் கருதப்பட்டு
வருகின்றது. கல்வியறிவு இல்லாத மிக எளிய மக்களும் கேட்டுப்
பயன்பெறுமாறு சொற்பொழிவாற்றும் ஒப்பற்ற திறன் இவருக்கு உண்டு.
இவரிடம் தமிழ் பயின்றவர்கள் பலர் தமிழ்த் துறையில் சிறப்புடன்
விளங்கினார்கள்.

     அறிவுத் துறையில் எப்படியில் நின்றவர்களும், எச்சமயத்தவரும்,
எம்மொழியினரும் தம் சொல்லைக் கேட்பராயின் அவர்களைப் பிணித்து
ஈர்க்கக்கூடிய நாநலம் வாய்ந்து விளங்கியவர் திருக்கோவலூர் ஆதீனத்துத்
தலைவர் சிவசண்முக மெய்ஞ்ஞான பரமாசாரிய ஞானியார் அடிகள் ஆவார்.
இவர் சொற்களை அளவறுத்துப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர். சமயம், தமிழ்
இலக்கியம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவும் ஆய்வும் ஆயிரக் கணக்கான
மக்களின் உள்ளங்களையும் கவரக்கூடிய ‘கணீர்’ என்ற குரலும் இவர்
படைத்திருந்தார். இவர் ஆங்கிலப் பயிற்சியும், ஆழ்ந்த வடமொழிப்
புலமையும் பெற்றிருந்தார். இவர் தொடர்ந்து பலமணி நேரம்
பேசினாராயினும், மக்கள் இவர் பேச்சுக்குக் கட்டுண்டு காலங்கழிவதையும்
மறந்துவிடுவதுண்டு. ஞானியாரின் வாய்ச்சொற்கள் முழுமையானவை,
இனிமையானவை, எளியவை, மங்கலமானவை. தம் தமிழ்ச் சொற்பொழிவுகளில்
வடமொழி, ஆங்கில நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டிப்
பேசுவது இவருடைய தனிச்சிறப்பாகும். குழந்தைகள், இளைஞர்கள்
ஆகியவர்களிடம் பரிந்து