பக்கம் எண் :

538தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கம் பல
தமிழ்நூல்களைப் புதிய பதிப்புகளில் திருத்தமாக வெளியிட்டுப் புகழ் பெற்றது.
ரா. இராகவையங்கார், மு.இராகவையங்கார் என்ற இரு தமிழ்ப் புலவர்கள்
தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல அரிய தொண்டுகள் புரிந்து
வந்துள்ளனர். எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி. கனகசபை பிள்ளை
ஆகியவர்கள் தமிழ் இலக்கிய வரலாறுகள் ஆங்கிலத்தில் இயற்றியுள்ளனர்.
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், கா. சுப்பிரமணிய பிள்ளை, ந. மு.
வேங்கடசாமி நாட்டார் முதலியோர் புரிந்த அரிய தமிழ்த்தொண்டுகள் மிகவும்
அண்மைக் காலத்தன வாகையால் அவற்றை ஈண்டு விரித்துக் கூறவில்லை.

     இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இரு பெரும்
தமிழறிஞர்கள் தமிழ் வளர்ப்பதிலேயே தம் வாணாளைக் கழித்தார்கள்.
ஒருவர் மறைமலையடிகள்; மற்றவர் திரு. வி. கலியாணசுந்தரனார் ஆவர்.
வடமொழிக் கலப்பற்ற தமிழ் நடைகளை இம் முதுபெரும் புலவர்கள்
இருவரும் தம் நூல்களில் வெற்றியுடன் கையாண்டு வந்தனர். அவர்கள்
தமிழுலகில் தோன்றிய வரையில் தமிழரின் எழுத்து வழக்கிலும், பேச்சு
வழக்கிலும் பயின்று வந்த பல தேவையற்ற வடமொழிச் சொற்களை அறவே
அகற்றிவிட்டு, அவற்றுக்கு இணையாகத் தூய தமிழ்ச் சொற்களை அமைத்துக்
கொடுத்தனர். அவர்கள் தாமும் பல நூல்களைத் தூய தமிழ்ச் சொற்களில்
எழுதி வெளியிட்டுள்ளனர். திரு. வி. கலியாணசுந்தரனார் தொழிலாளர் நல
இயக்கத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டவர். அவர் தொழிலாளருக்கு
ஆற்றிவந்த சொற்பொழிவுகளில் சிறுசிறு எளிய தீந்தமிழ்ச் சொற்களும்,
ஆழ்ந்த கருத்துகளும், தெளிவும், ஓட்டமும், புரட்சிப் புதுமைகளும் பொதிந்து
கிடக்கும். மிகவும் குறுகிய சொற்றொடரைக் கையாண்டு சொற்பொழிவாற்றி,
அன்பினாலும் ஆதரவினாலும் தொழிலாளரின் உள்ளத்தைத் தொட்டது
இவரிடம் வாய்க்கப் பெற்றிருந்த ஆற்றலாகும். கலியாணசுந்தரனார்
வெளியிட்டு வந்த ‘நவசக்தி’ என்ற வார இதழ் பைந்தமிழ்ப்
பூஞ்சோலையாகவே மிளிர்ந்தது. ‘படித்தோர் சிந்தை உவகையெனும் பரவை
குளிப்பப் பசுந்தமிழை வடித்தே எழுதும் நவசக்தி எனும் பேர் வாரப்
பத்திரிகை’ என்று பண்டிதை அசலாம்பிகை அம்மையார் தாமியற்றிய காந்தி
புராணத்தில் புகழ்ந்து பாடுகின்றார். கலியாணசுந்தரனார் வழியில் தொடர்ந்து
செல்லும் இளைஞர் சமுதாயம் ஒன்று தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டு
வருகின்றது.