| செய்யுள் வடிவிலும் இயற்றப்படுகின்றன. அந்நிய மொழி இலக்கியங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான இலக்கியமும் தமிழில் வெகு வேகமாக வளர்ந்து வருகின்றது. பூண்டி அரங்கநாத முதலியார் பழம்மரபு வழுவாமல் கச்சிக் கலம்பகம் என்னும் நூலை இயற்றி வெளியிட்டார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்னும் ஒரு கவிதை நாடகம் எழுதினார். சிறந்த நாடகக் கூறுகளும், இலக்கியச் சுவையும், மெய்ப்பாடுகளும் ஒருங்கே அமைந்த நாடகப் படைப்பு இது. முதன்முதல் கவிதை வடிவில் எழுந்த நாடகமும் இதுதான். இது பல அரங்கங்களில் நடிக்கப்பட்டு வருகின்றது; திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் பழஞ்சுவடிகள் பலவற்றை ஆராய்ந்து சங்க நூல்கள் சிலவற்றையும், வேறு நூல்களையும் பதிப்பித்தார். தமிழாராய்ச்சி மாணவருக்கும் பயனாகுமாறு அமைக்கப்பட்ட இவரது பதிப்பை மிஞ்சக்கூடிய பதிப்பு வேறுஒன்று வந்திலது. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பல தமிழ்நூல்களுக்கு அரிய உரைகள் இயற்றினார். தாம் பதிப்பித்த நூல்களில் காணப்பட்ட இலக்கிய இலக்கண நுண்பொருள்களை ஆய்ந்தெடுத்துக் கொடுக்கும் அரிய ஆற்றலுடையவர் இவர். தமிழ் கற்கும் மாணவர்கட்கு இவருடைய உரையைப் போலப் பயன்பாடுடைய பிறிதோர் உரையைக் காண முடியாது. அட்டாவதானம் வீராசாமி செட்டியார் விநோதரசமஞ்சரி என்னும் கதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். இவர் கையாண்டுள்ள உரைநடை பயிலுந்தோறும் இன்பம் பயப்பது. ஆ. சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி என்னும் கலைக்களஞ்சியம் ஒன்றை எழுதி வெளியிட்டார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க பல நற்பணிகளைச் செய்தவர் பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் ஆவார். எழுத்துக் கற்கத் தொடங்கும் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையில் பயிற்சிப் பாடநூலாகப் பயன்படுத்தி வந்த நூல்கள் பல இவருடைய படைப்புகளாகும். கண்கவரும் புதிய அச்செழுத்து வடிவங்களையும் இவர் தமிழ்மொழிக்குத் தந்துள்ளார். நமச்சிவாய முதலியார் பல புலவர்களுக்குப் புரவலராகவும் வாழ்ந்தவர். |