| இவ்விடங்களிலிருந்தும் நாவாய்கள் கரையோரமாகவே பாய்விரித்தோடிச் சேரநாட்டுத் துறைமுகங்களை யடைவதுண்டு. பிற்காலத்தவர்களான பல்லவர்கள் இரட்டைப் பாய் விரித்த கப்பல்களையும் வாணிகத்தில் ஈடுபடுத்தியிருந்தனர். சேரநாட்டுக் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகங்களில் வந்து தங்கிய கிரேக்கக் கப்பல்கள் மிகவும் பெரியவை. பருவக் காற்றுகளின் பயனை அறிந்தபிறகு ரோமாபுரியின் வாணிகம் ஓங்கி உச்ச நிலையை எட்டிற்று. செல்வஞ் செழித்த ரோமாபுரிப் பிரபுக்கள் முதலீடு செய்து மிகவும் பெரிய மரக்கலங்களைக் கட்டுவித்தார்கள். வாணிகத்தின் வளர்ச்சிக்கேற்ப அக் கப்பல்களின் எண்ணிக்கையும் அளவும் பெருகிக்கொண்டே போயின. எகிப்தியரும் கப்பல் கட்டும் கலையில் சளைத்தவர்களல்லர். இந்திய சமுத்திரத்தைக் கடந்து செல்லுமளவுக்கு மிகப் பெரிய கப்பல்களை அவர்கள் ஓட்டினர். எகிப்தியர் செலுத்திய கப்பல்கள் சிலவற்றிற்கு ஏழு பாய்மரங்கள் விரிக்கப்பட்டிருந்தனவாம். தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான பண்டங்கள் ஏற்றுமதியாயின. புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் ஆகியவற்றைத் தமிழகம் ஏற்றுமதி செய்தது. தமிழகத்து வேட்டை நாய்கள், தரத்தில் மேலானவை என அயல்நாடுகளில் மிகவும் பாராட்டப்பெற்றன. புலிகள் ஒரு வேளை வடஇந்தியாவிலிருந்தும் ஏற்றுமதியாகி யிருக்கக்கூடும். ஆனால், யானைகள் தமிழகத்தில் மட்டுந்தான் உயிர்வாழ்ந்தன. ஆகையால், யானைகள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும். அயல்நாட்டினர் சில பாம்பினங்களையும் தமிழகத்தில் கொள்முதல் செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒன்பதடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றைத் தாம் எகிப்தில் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார். சேரநாட்டுக் காடுகளில் பலவகையான, மிகவும் நீண்ட பாம்புகள் மலிந்து கிடந்தன. எனவே, சேர நாட்டுத் துறைமுகங்கள் மூலம் இப் பாம்புகள் ஏற்றுமதியாயின என்று ஊகிக்கலாம். மேலை நாட்டினர் தமிழகத்தில் வாணிகம் செய்த பண்டங்களில் மிகவும் விலையுயர்ந்தவை யானைத் தந்தங்களும் முத்துகளுமேயாம். தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், மிளகு, இஞ்சி, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டட மரவகைகள் முதலியன. மிளகும் இஞ்சியும் மருந்துகள் செய்யப் |