பக்கம் எண் :

60தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

பயன்பட்டன. ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்க மருத்துவர் கி.மு.
ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் இந்திய மருத்துவ முறைகளையும்,
மருந்து வகைகளையும் கையாண்டு வந்தார். அவர் மிளகை ‘இந்திய மருந்து’
என்றே குறிப்பிடுகின்றார். நல்லெண்ணெயின் பயனைக் கிரேக்கர்கள் கி.மு.
ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர். நல்லெண்ணெய்
பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களுள் ஒன்றாகும். ரோமரும்
நல்லெண்ணெயை இறக்குமதி செய்தார்களா என்பது தெரியவில்லை.
தமிழகத்துக் கருங்காலி மரங்கள் ரோமாபுரியில் பெருமளவில்
விற்பனையாயின. பாரசீக வளைகுடாத் துறைமுகங்களில் தமிழகத்துத் தேக்க
மரங்களைக் கொண்டு கப்பல்கள் கட்டினார்கள். தேக்க மரங்கள் சேர நாட்டுக்
காடுகளிலிருந்தும் கன்னட நாட்டிலிருந்தும் வெட்டி ஏற்றுமதி
செய்யப்பட்டவை என்பதில் ஐயமில்லை.

     தமிழகம் மேலைநாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பைப்
பற்றிச் சங்க இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. தமிழகர்கள்
அந் நாடுகளிலிருந்து தேயிலையும் பொன்னையும் இறக்குமதி செய்தனர். பல
யவனர்கள் தமிழக மன்னர் அரண்மனைகளில் கைவினைக் கம்மியராகவும்,
காவற்காரராகவும் பணிபுரிந்தனர். ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப...’ (யவனர்
நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப்
பொன் வளையல்களை யணித்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட
பொற்கிண்ணங்களில் ஊட்டுவிக்கின்றனர்) என்று புறநானூற்றுச் செய்யுள்
ஒன்று கூறுகின்றது.2 ‘சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க யவனர்
தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம்
கெழு முசிறி ஆர்ப்பு எழ...’ (ஒடிந்த மரச் சுள்ளிகளை ஏந்தி வரும்
பேரியாற்றில் குமிழ்த்தெழும் வெள்ளை வெளேரென்று மின்னிய நுரைகள்
கலங்கும்படி யவனர் செய்து முற்றிய அழகிய வேலைப்பாடமைந்த உறுதியான
மரக்கலங்கள் பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டு மிளகு மூட்டைகளை
ஏந்திச்செல்லும் பேரொலி எழும் வளம் மிகுந்த முசிறிப்பட்டினம்...) என்று
அகநானூறு3 குறிப்பிடுகின்றது. மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக்
கீழைநாடுகளான சீனம், மலேசியா, ஜாவா (சாவகம்), வடபோர்னியா ஆகிய
நாடுகளுடனும்

     2. புறநானூறு- 56. 3. அகநானூறு - 149.