பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 61

தமிழகமானது மிகவும் வளமானதொரு கடல் வாணிகம் நடத்தி வந்தது
குறிப்பிடத் தக்கதாகும். சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிகத்
தொடர்பானது மிகவும் பழைமையானதாகும். இத் தொடர்பு கி.மு. ஆயிரம்
ஆண்டவிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகின்றது. தமிழகத்துப்
பண்டங்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின
என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும்,
சருக்கரையையும் தமிழகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இன்றளவும்
பட்டுக்குச் சீனம் என்றும், சருக்கரைக்குச் சீனி என்றும் பெயர் வழங்கி
வருகின்றது. சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண்,
சீனக் காக்கை, சீனக் காரம், சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச்
சட்டி, சீனர் சரக்கு, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீனத்து முத்து, சீன நெல்,
சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப்புகை, சீனப் புல், சீனப்
பூ, சீன மல்லிகை, சீன மிளகு, சீன ரேக்கு, சீன வங்கம், சீன வரிவண்டு,
சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் என்னும் சொற்கள் இன்றளவும்
தமிழ்மொழியில் பயின்று வருகின்றன. சீனம் என்னும் சொல்லுடன் இணைந்து
வரும் தமிழ்ச் சொற்கள் இன்னும் பல உண்டு.

     பிலிப்பீன் தீவுகளில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில்
இரும்புக்காலப் புதைபொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்
கத்திகள், கோடாரிகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தையும் கி.மு.
முதலாம் ஆயிரம் ஆண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப்
பெரிதும் ஒத்துள்ளன. சீனம், சாவகம் போன்ற கீழைநாடுகளுடன்
மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் பழைமையை இச்சான்றுகள்
எடுத்துக் காட்டுகின்றன.

     கிழக்காசிய நாடுகளுக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த
கடல் வாணிகத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா,
சாவகம் முதலிய நாடுகளிலிருந்து தமிழகம் பண்டங்களைக் கொள் முதல்
செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. மேலை
நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த கடல் வாணிகம் குன்றிய பிறகு கீழை
நாடுகளுடனான அதன் வாணிகம் மேலும் மேலும் வளர்ந்து வரலாயிற்று.
தமிழகத்து மக்கள் இந் நாடுகளில் பல குடியேற்றங்களை அமைத்துக்
கொண்டனர்; இந் நாடுகளுடன் அரசியல் தொடர்புகளைப் பெருக்கிக்
கொண்டனர்; இங்கெல்லாம் தம் நாகரிகத்தையும் பண்பாடுகளையும் பரப்பினர்.