| ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தங்கி வாணிகம் செய்துவர வேண்டுமாயின் அந் நாட்டில் உள்நாட்டு வாணிகம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, தமிழகத்தின் உள்நாட்டு வாணிகம் செழித்தோங்கி யிருந்தது எனலாம். தமிழகத்து வணிகர்கள் கூட்டங் கூட்டமாகக் கூடிக் கொண்டு, வண்டிகளிலும் பொதிமாடுகளின் மேலும் தம் பண்டங்களை ஏற்றிச் சென்று ஊரூராக விலை கூறுவர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் மலிந்து கிடக்கின்றன.4 உள்நாட்டு வாணிகத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே வழங்கி வந்தது. தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமிடையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிகம் நடைபெற்றுவந்தது. தமிழகத்தில் ஊர்கள் சில பண்டங்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கின. பாண்டி நாட்டு முத்துகளைப் பற்றி மெகஸ்தனிஸ் சாலவும் புகழ்ந்து பேசுகின்றார். தாமிரவருணி, பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துகளும், மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைவகைகளும் கௌடிலியரின் அருத்தசாத்திரத்தில் புகழிடம் பெற்று விளங்குகின்றன. உறையூர், பருத்தி நெசவில் பேர்பெற்று விளங்கிற்று. தமிழகத்துப் பண்டங்கள் வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே சென்றன; தரை வழியாக நடைபெற்ற வாணிகம் மிகவும் குறைவுதான். தமிழகம் அயல்நாடுகளுடன் மேற்கொண்டிருந்த வாணிக உறவானது தமிழரின் நாகரிகம், பண்பு, கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்குக் கைகொடுத்து உதவிற்று. குறிப்பாக வட இந்திய வாணிகத் தொடர்பினால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நல் விளைவுகள் பல ; தீமைகளும் பல. வட இந்தியாவிலிருந்து வாணிகச் சரக்குகளுடன் ஆரிய மக்களும் சிறுசிறு கூட்டமாகத் தமிழகத்தில் நுழையலானார்கள். ஆரியரின் நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் தமிழரின் நாகரிகத்துக்கும் பண்பாடுகளுக்கும் ஆழ்ந்த வேறுபாடுகள் உண்டு. அவர்களுடைய மொழிக்கும் தமிழ் மொழிக்கு மிடையே முரண்பாடுகள் பல உண்டு. ஆரியரின் கடவுளர் வேறு; தமிழர் வழிபட்டு வந்த கடவுளர் வேறு. ஆரியரின் வாழ்க்கை முறைகள் வேறு ; தமிழரின் வாழ்க்கை முறைகள் வேறு. இடம்விட்டு இடம் பெயரும் மக்கட் 4. பெரும்பாணாற்றுப்படை அடி - 65. |