பக்கம் எண் :

பண்டைய தமிழரின் அயல்நாட்டுத் தொடர்கள் 63

கூட்டங்களில் பெரும்பாலார் உடற்கட்டும் நெஞ்சுரமும் இளமையும்
வாய்வளமும் வாய்ந்தவர்களும், கலைஞர்களும், புதுமை வேட்கையினரும்
மட்டுமே சேர்ந்திருப்பர் ; நோய்வாய்ப்பட்டவர்களும், அறிவிலிகளும், கோழை
நெஞ்சினரும் இடம் பெறார்கள். தமிழகத்தை நாடிவந்த ஆரியரும் முற்கூரிய
நல்வாய்ப்புகள் அனைத்தும் பெற்றவர்களாகவே இருந்தனர். தமிழகத்துக்குள்
அடிவைத்த ஆரியர்கள் பலர் தமிழ்நாட்டிலேயே தங்கிக் குடியேறிவிட்டனர்.
அவர்கள் மக்களுடன் கலந்து வாழ்ந்தும் தமிழ் மொழியைப் பயின்றும்,
தமிழரின் பழக்க வழக்கங்களைத் தாமும் மேற்கொண்டும், தமிழ்க்குடிகளாகவே
மாறிவிட்டனர் எனினும், அவர்களுடைய நெஞ்சின் ஆழத்தில் மட்டும் தாம்
வடவர்கள் என்றும், தம் நாகரிகமும் பழக்க வழக்கங்களும் மேலானவை
என்றும், தமக்கு இடங்கொடுத்திருந்த தமிழ் மக்கள் தாழ்குடிகள் என்றும் ஓர்
உட்குரல் ஒலிக்கக் கேட்டுக் கொண்டேயிருந்தது. நாளடைவில் தமிழகத்து
மன்னர்களின் நன்மதிப்பையும், நட்புறவையும் இவர்கள் ஈட்டிக்கொண்டனர்.
அவற்றைத் தம் நலத்துக்கும், தம் குடி நலத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும்
அரியதொரு வாய்ப்பை ஆரியர் கைநழுவ விடவில்லை. அவர்கள் ஆரிய
எழுத்துகளின் ஒலிகளையும் ஆரியர் சொற்களையும் தமிழிலும் கலந்தனர்.
தம்முடைய பழக்க வழக்கங்களையும், சமயக் கோட்பாடுகளையும், தெய்வ
வழிபாட்டு முறைகளையும், பண்பாடுகளையும் அவர்கள் தமிழகத்தில்
பரவவிட்டனர். இரு வேறு இயல்புகள் படைத்த தமிழர்,
ஆரியர்களுக்கிடையே இனக் கலப்பும் உண்டாயிற்று. இக் கலப்புகள் யாவும்
மெல்ல மெல்லக் காலப் போக்கில் ஏற்பட்டனவேயன்றித் திடீரென்று ஒரு சில
நாளில் ஏற்பட்டனவல்ல. எந்நாட்டிலும், எக்காலத்திலும் திடீர்க் கலப்புகள்
நிகழுவது இயல்பன்று. தமிழகம் ஆரியமயமாக்கப்பட்டது என்று சிலர் கூறுவர்.
அவர்களுடைய கருத்துக்குச் சான்றுகள் கிடையா. எனவே, அதை உண்மை
என நம்புவதற்கில்லை. வெகு காலமாகத் தனிச் சிறப்புடனும் தூய்மையுடனும்
வளர்ந்து வந்த ஒரு நாகரிகமும் பண்பாடும் இடையில் நுழைந்த ஒரு
மக்களினத்தின் முயற்சியால் வழக்கிறந்து அழிந்து மறைந்து போய்விட்டன;
தமிழகம் ஆரிய நாடாகிவிட்டது என்னும் கூற்றானது வரலாற்றுக்கு
முரண்பாடாகும். ஆரிய மொழி தமிழகத்தில் நுழைந்து பரவலாயிற்று
என்பதை மறுக்க முடியாது. ஆரிய எழுத்தொலிகளும் சொற்களும் தமிழில்
கலந்தனவாயினும் அவற்றுக்குத் தமிழர் ஓர் ஒதுக்கிடத்தையே அளித்து
வந்தனர். அவற்றைத் தமிழில் ஆளுவதற்குத் தனி இலக்கண விதிகள்
வகுக்கப்பட்டன.