பக்கம் எண் :

94தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

     நூல்கள் யாவற்றினும் பழைமையானது தொல்காப்பியமாகும். இந்நூல்
இடைச்சங்க காலத்தில் எழுந்ததாக இறையனார் களவியல் உரையாசிரியர்
கூறுவார். அப்படியாயின் அது கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றியதெனக்
கொள்ளலாம். தொல்காப்பியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள்
அனைத்தினுக்கும் முற்பட்டதாகும். இதற்கு முரணாகச் சில ஆராய்ச்சியாளர்
தொல்காப்பியம் கடைச் சங்க நூல்கள் யாவற்றுக்கும் காலத்தால்
பிற்பட்டதெனக் கால அறுதியிடுவர். மனுதரும சாத்திரம், பரதமுனியின்
நாட்டிய நூல், வாத்சயாயனரின் காமசூத்திரம் ஆகியவற்றை ஆய்ந்து
தொல்காப்பியர் தம் இலக்கண நூலைப் படைத்தார் என்று அவர்கள்
கருதுகின்றார்கள். இவர்கள் கருத்துக்குத் திட்டமான சான்றுகள் கிடையா.
தமிழகத்திலிருந்து பல கருத்துகளும் சொற்களும் வடமொழியில் நுழைந்து
இடம் பெற்றுள்ளன. இவ்விரு மொழிகளுக்கும், வேறு மொழிகள்
சிலவற்றுக்குமிடையே பொதுவான கூறுபாடுகள் பல உள. எனவே,
தொல்காப்பியர் வடமொழி நூல்கள் காட்டிய வழியிலேயே தம் இலக்கணத்தை
இயற்றினார் என்பது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பாகும். ‘சமஸ்கிருத
நாடகமும், அதன் தோற்றமும் மறைவும்’ என்னும் நூலின் ஆசிரியரான
இந்துசேகர் என்பார் தமிழ்நாட்டில் பரதர் என்ற ஒரு குலம் இருந்ததென்றும்,
நாட்டியம் ஆடுவதும் நடிப்பதும் அவர்களுடைய தொழிலாகும் என்றும்,
ஆரிய வேதியருக்கு இக்கலையில் உடம்பாடு கிடையாது. ஆகையால்,
இவற்றைப் பயின்று வந்தத் தமிழ் பரதரை அவர்கள் தாழ்வாகக் கருதி
வந்தனர் என்றும் கூறுகின்றார்.

     வச்சிரநந்தி என்ற சமணர் தொடங்கிய ‘திராமிள’ சங்கமே தமிழ்ச்
சங்கம் என்னும் பெயரில் வழங்கி வந்தது என்றும், அச் சங்கம் கி.பி. 470-ல்
செயல்படத் தொடங்கிற்று என்றும், அதனின்றும் வெளியான முதல் தமிழ்நூல்
தொல்காப்பியமே என்றும் வையாபுரி பிள்ளையவர்கள் தம் ஆழ்ந்த
தமிழாய்வின் பயனாய் வெளியிட்டது மற்றொரு வியப்பூட்டும் ஊகமாகும்.
இதை வரலாற்று உண்மையாக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளார்கள்.
தமிழ்நாட்டில் சமணத்தைப் பரப்புவதற்காகவே ஏற்பட்டது வச்சிரநந்தியின்
திராமிள சங்கம் என்பது. தமிழ் மொழியில் இலக்கிய இலக்கணம்
தோற்றுவித்து மொழிக்கு வளமூட்டுவதில் அதற்கு ஈடுபாடே கிடையாது.
எனவே, அச் சங்க காலத்துக்குச் சாலவும் முற்பட்டது தொல்காப்பியம்
என்பது தேற்றம்.