| தொல்காப்பியரின் காலத்தைப் போலவே அவருடைய சமயக் கொள்கைகளும் இன்னவென அறிந்துகொள்ள முடியவில்லை. தொல்காப்பியர் சமணர் என்று ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட காலத்தில் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே’ என்று தம் புகழை நிலைநாட்டிக் கொண்டவர் எனப் பனம்பாரனார் தொல்காப்பியரைப் பாராட்டிச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்திரம் என்னும் நூலைப்பற்றியும், படிமை என்னும் சொல்லைப்பற்றியும் ஆராய்ச்சியாளரிடையே முரண்பாடான கொள்கைகள் காணப்படுகின்றன. ஐந்திரம் என்பது ஐந்திர வியாகரணம் என்னும் பெயரின் குறுக்கமாகும். வடமொழியின் வளர்ச்சியை முன்னிட்டு அது இந்திரனால் இயற்றப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்திரனால் செய்யப்பட்ட நூல் ஐந்திரம் என்னும் பெயர் ஏற்றது வடமொழி வழக்கு. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்ற பனம்பாரனார் கூற்றுக்குச் சிவஞான முனிவர், ‘வட மொழியினும் வல்லனாயினான் என்பார் ஐந்திரம் நிறைந்த ‘தொல்காப்பியன்’ என்று பொருள் உரைத்தார். தொல்காப்பியர் காலத்தில் ஐந்திரமானது வடமொழியில் சிறந்த இலக்கண நூலாக விளங்கிற்று. இதையும் தொல்காப்பியர் நன்கு பயின்றிருந்தாராகலின் அவரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று பனம்பாரனார் கூறினார். மற்றொரு புகழ் பெற்ற இலக்கண நூலான பாணினீயம் அக்காலத்து வழக்கில் இல்லை. அப்படி அது வழங்கியிருக்குமாயின் பனம்பாரனார் தொல்காப்பியரைப் ‘பாணினீயம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று பாராட்டியிருப்பார். இந்திரனால் செய்யப்பட்ட நூலினை, ‘விண்ணவர் கோமான் விழுநூல்’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.12 இங்குச் சுட்டப்படுவது ஐந்திர வியாகரணம் என்று உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கருதுகின்றார். மாங்காட்டு மறையோன், ‘புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்’ என்று கூறினான்; அவன் வைதிக மறையோன், அவனுக்கு மறுமொழியாகக் கவுந்தியடிகள் ‘கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்பாட்டியற்கையின் விளங்கக் காணாய்’ என இயம்பினார்.13 12. சிலப்-11 : 98-99. 13. சிலப்-11 : 154-155. |