| அதாவது, “தேவர்களும் ஆயுள் கற்பத்தினை மிகவுடைய இந்திரன் தோற்றுவித்த வியாகரணத்தினை எம்முடைய அருக குமரன் அருளிச்செய்த பரமாகமங்களில் காண்கின்றிலையோ?” என்பது இதன் விளக்கம். மறையோன் கூறிய ஐந்திரமும், கவுந்தியடிகள் குறித்த பரமாகமமும் வேறு வேறென்றும், கவுந்தியடிகள் சமணப் பற்றுடையவராகலின், வைதிக நூலான ஐந்திரத்தைத் தாழ்த்திச் சமண நூலாகிய பரமாகமத்தை உயர்த்திக் காட்டினார் என்றும் அறிகின்றோம். சமண முனிவராகிய இளங்கோவடிகளே கவுந்தியடிகளின் வாயிலாக ஐந்திரம் ஒரு வைதிக நூலாகும் என்று புலப்படுத்தியுள்ளார். எனவே, தொல்காப்பியனார் காலத்தில் வழக்கிலிருந்த ஐந்திர வியாகரணம் இளங்கோவடிகள் காலத்தில் வழக்கொழிந்து, மாங்காட்டு மறையோன் கூறியபடி, புண்ணிய சரவணம் படிந்து தெய்வத்தினிடம் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு நுணுகிவந்து இறுதியில் மறைந்தே போயிற்று. மறைந்துபோன ஐந்திரத்தைச் சிவபெருமான் பாணினிக்கு உரைசெய்தார் என்பது வடமொழி மரபு. திருநாவுக்கரசரும் ‘இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்’ என்று சிவபெருமானைப் பரவுகின்றார்.14 பனம்பாரனார் தம் சிறப்புப் பாயிரத்தில், ‘பல்புகழ் நிறுத்த படிமையோன்’ என்று புகழ்ந்திருப்பதைச் சற்று ஆய்வோம். படிமையோன் என்னும் சொல் சமண சமயத்து வழங்கும் சொல்லென்றும், அதனால் தொல்காப்பியனாரைச் சமண சமயத்தினர் என்றும் சிலர் கூறுவர். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இச் சொற்றொடருக்குப் ‘பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை யுடையோன்’ என்னும் பொருள் பகர்வார். படிமை என்னும் சொல் சமண சமயத்துக்கே உரித்தானதொரு சொல்லன்று. அப்படி அஃது இருந்திருக்கு மாயின் பிறசமயத்தினர் அக் காலத்தில் அதை எடுத்து ஆண்டிருக்க மாட்டார்கள். பதிற்றுப்பத்து 74ஆம் பாடலில் ‘கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப... கூறினை பெருமநின் படிமையானே’ என்னும் அடிகளில் வைதிக ஒழுக்கம் பாராட்டப்படுகின்றது. இங்குப் படிமையான் என்னும் சொல் தவவொழுக்கம் உடையவன் எனப் பொருள்படுகின்றது. படிமை என்ற சொல்லின் பகுதி ‘படி’ என்பதாம். படி என்னும் சொல் நிலத்தின் தன்மையைக் குறித்து நிற்கும்.15 நிலத்தின் நீர்மையான ‘தன்மை’ என்னும் 14. தேவாரம்-6-28-8. 15. தொல்.பொருள் அகத்-82. |