பக்கம் எண் :

கூத

கூத்துக் கலை

1. பதினோர் ஆடல்

 

     இசைக்கலையுடன் தொடர்புடையது ஆடற்கலை என்னும் கூத்துக்கலை.
கூத்துக்கலை, இசைக் கலையைப் போலவே பழைமை வாய்ந்தது. வாயினால்
பாடப்பட்ட இசைப்பாட்டுக்குச் செந்துறைப் பாட்டு என்றும், கூத்துக்
கலைக்குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு.

 

     பண்டைக் காலத்தில் ஆடப்பட்டு இப்போது மறந்து போன
ஆடல்களைப் பற்றிக் கூறுவோம்.

 

     பண்டைக் காலத்திலே பதினொரு வகையான ஆடல்களை
ஆடிவந்தார்கள். இவ்வாடல்களைக் கூத்து என்றும் கூறுவதுண்டு.
இவ்வாடல்கள், தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டபடியால், தெய்வ
விருத்தி
என்று கூறப்படும். தெய்வங்கள் தமது பகைவரான
அவுணர்களுடன் போர் செய்து வென்று, அவ்வெற்றியின் மகிழ்ச்சி
காரணமாக ஆடிய ஆடல்கள் இவை.

 

     இப்பதினோராடல்களின் பெயர்களாவன:

 

     1. அல்லியம்; 2. கொடுகொட்டி; 3. குடை; 4. குடம்; 5. பாண்டரங்கம்;
6. மல்; 7. துடி; 8. கடையம்; 9. பேடு; 10. மரக்கால்; 11. பாவை.
 

     இவற்றில் முதல் ஆறும் நின்று ஆடுவது; பின்னுள்ள ஐந்தும் வீழ்ந்து
ஆடுவது. என்னை?