பக்கம் எண் :

இசைக்கலை

139


 

இசைக் கற்றூண்கள்

                       

     சிற்பிகள் சிலர், தமது சிற்பக் கலைகளிலேயும் இசையை
அமைத்திருக்கிறார்கள். இது சிற்பிகளின் திறமையைக் காட்டுகிறது. மதுரை
மீனாட்சியம்மன் கோயிலில் மொட்டைக் கோபுரம் எனப்படும் வடக்குக்
கோபுரத்தருகில் உள்ள ஐந்து தூண்கள் தட்டினால் இசை ஒலிக்கும்படி
அமைக்கப்பட்டுள்ளன. கருங்கற்பாறையில் அமைந்த இந்தத் தூண்களில் 22
மெல்லிய கம்பங்களைச் சிற்பிகள் அமைத்திருக்கிறார்கள். இம்மெல்லிய
கற்கம்பங்களைக் கம்பியினால் தட்டினால் இசைகள் உண்டாகின்றன.

 

     திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் சுசீந்திரம் கோயிலிலும்
இதுபோன்று இசைக் கற்றூண்கள் உள்ளன.

 

     புதுக்கோட்டையைச் சேர்ந்த அன்னவாசல் என்னும் ஊரில் ஒரு ஜைன
உருவம் கருங்கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விக்கிரகத்தைத்
தட்டினால் இனிய இசை உண்டாகிறது. அளவுக்கு அதிகமாகத் தட்டித்தட்டி
மக்கள் இந்த உருவத்தைச் சிறிது உடைத்து விட்டார்கள். கலைச்
செல்வங்களின் பெருமையையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய
பொறுப்பையும் நமது நாட்டினர் இன்னும் உணரவில்லை.

 

     சிற்பிகள் தமது வன்மையினாலே கருங்கல்லில் அமைத்த வேறு சில
பொருள்களும் உள்ளன.