பக்கம் எண் :

138
138

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

நிபுணர் ஆனார். இக்கருவியை நமது நாட்டு இசைப்பாட்டிற்குத்
துணைக்கருவி யாக்கினார். கிளார்னெட் என்னும் மேல்நாட்டு
இசைக்கருவியை நமது நாட்டு இசைக்கருவியாக்கிக் கொடுத்த வித்துவான்
சின்னையா பிள்ளை அவர்கள் இவருடைய உடன்பிறந்த சகோதரர்.
திருவாங்கூர் அரசரும், இசையில் வல்லவருமான சுவாதித் திருநாள்
மகாராஜா அவர்கள், வித்துவான் வடிவேலுபிள்ளை அவர்களின் பிடில்
வாசிக்கும் திறமையை மெச்சிப் புகழ்ந்து, அவருக்குத் தந்தத்தினால்
செய்யப்பட்ட பிடில் ஒன்றை 1834ஆம் ஆண்டில் பரிசாக
வழங்கினார். ஐரோப்பிய இசைக்கருவியாகிய பிடிலை, நமது நாட்டு இசைக்
கருவியாக்கித் தந்த வித்துவான் வடிவேலுபிள்ளை அவர்களுக்குத் தமிழ்
உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது. இப்போது இது பெரிதும்
வழங்கப்படுகிறது. இக்காலத்தில் பிடில், வாய்ப்பாட்டிற்கு இன்றியமையாத
இசைக்கருவியாக விளங்குகிறது. அன்றியும், புல்லாங் குழலைப் போலத் தனி
இசைக்கருவியாகவும் வாசிக்கப்படுகிறது. இது சிறந்த இசைக்கருவியாகும்.

 

     (மேல்நாட்டுப் பிடிலை நமது இசைக்கருவியாக்கிக் கொண்டது
போலவே, மேல்நாட்டு பேண்டு (Band) என்னும் இசையையும் நமது நாட்டு
இசையாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.)

 

     கஞ்சக்கருவிகள்: இவை வெண்கலத்தால் செய்யப்படுவன. தாளம்,
குண்டுதாளம், பிரமதாளம், ஜாலர் முதலியன.

 

     கடம்: குடம் என்றும், பானை என்றும் பெயர். இது மண்ணால்
செய்யப்பட்டது. பழைய இசைக்கருவிகளில் ஒன்று. குடம் வேறு: குடமுழா
வேறு. குடமுழாஎன்பது பஞ்சமுக வாத்தியம்.