பக்கம் எண் :

152

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    விளக்கத்தனார் என்பவர் இயற்றிய விளக்கத்தார் கூத்து என்னும்
நூலைப் பேராசிரியர் என்னும் உரையாசிரியரும் யாப்பருங்கல
விருத்தியுரைகாரரும் தமது  உரைகளில் குறிப்பிடுகிறார்கள். தொல்காப்பியம்,
பொருளதிகாரம், செய்யுளியலில், ‘‘சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து’’
என்னும் சூத்திரத்தின் உரையில், அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய
நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன’’ என்று பேராசிரியர்
எழுதுகிறார். யாப்பருங்கல விருத்தியுரைகாரர் 40ஆம் சூத்திர உரையில்

இந்நூலைக் குறிப்பிடுகிறார்.

 

    மதிவாணனார் என்பவர் இயற்றிய நாடகத் தமிழ் என்னும் நூலிலும்
இந்தப் பதினோர் ஆடல்களும் கூறப்பட்டிருந்தன என்பது
தெரிகிறது.
மதிவாணனார் நாடகத் தமிழ் நூலை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்
குறிப்பிட்டு, அந்நூல் சூத்திரம் ஒன்றையும் மேற்கோள்

காட்டுகிறார்.1

 

     செயன் முறை என்னும் நாடகத் தமிழ் நூல் ஒன்று இருந்தது.
இந்நூலை யாப்பருங்கல உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.2 இந்நூலிலும்
கூத்துகளைப் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கவேண்டும்.

 

குரவைக் கூத்து

 

     கூத்துக்களில் குரவைக் கூத்து என்னும் கூத்தும் உண்டு. அது மகளிர்
ஆடுவது. எழுவர், எண்மர், ஒன்பதின்மர் மகளிர் வட்டமாக நின்று
கைகோத்து ஆடுவது.

 

     ‘‘குரவை என்பது எழுவர் மங்கையர்

    செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்

    தந்நிலைக் கொட்பநின் றாட லாகும்’’

 

 


1.       சிலம்பு. கடலாடு காதை, 35ஆம் வரி உரை மேற்கொள்.

2.      செய்யுளியல், 29ஆம் சூத்திர உரை.