பக்கம் எண் :

62

62

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


 

    சோழர்கள் காலத்திலே அடியார், நாயன்மார்களுக்கும் உருவங்கள்
அமைக்கப்பட்டன. இந்த அடியார்கள், நாயன்மார்களின் உருவங்கள்,
திருவுண்ணாழிகையின் வெளிப்புறத்தில், அதைச் சூழ்ந்துள்ள சுற்றாலை
மண்டபங்களில் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவுண்ணாழிகைக்கு
வெளியே சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்ட படியால்,
மூலக்கோயில்கள் கட்டட அமைப்பு மறைக்கப்பட்டது. அன்றியும், சுற்றாலை
மண்டபத்தில் சாளரங்கள் அமைக்காதபடியால், பட்டப் பகலிலும் இருள்
சூழ்ந்திருக்கிறது. மூலக்கோயிலின விமானம் மட்டும் தூரப்பார்வைக்குத்
தெரியும். மூலக் கோயிலின் அதிஷ்டானத்திலும் (அடிப்புறம்), சுவரிலும் சிற்ப
வேலைகள் அமைந்து, அப்பகுதிகளே கட்டடத்தின் அழகான பகுதிகளாக
விளங்குபவை. அப்பகுதியைச்  சுற்றிலும் மண்டபம், அமைத்து
மறைத்துவிட்டதல்லாமல், இருள் சூழும்படியும் செய்துவிட்டார்கள். இப்படிச்
செய்தது மூலக்கோயிலின் அழகையே கெடுத்துவிட்டது. இப்பொழுது உள்ள
மூலக்கோயில்களில் பெரும்பான்மையும் மூலக்கோயிலின் கட்டட அழகு
மறைக்கப் பட்டவையே. சுற்றாலை மண்டபங்களால் மறைக்கப்படாத
மூலக்கோயில்கள் மிகச்சிலவே இக்காலத்தில் உள்ளன.

 

     அண்மையில், மிகப் பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஒரு கோயிலுக்கு,
அக்கோயிலின அமைப்பை ஆராய்வதற்காகச் சென்றேன். மூலக்கோயிலின்
முன்புறத்தில மிகப்பெரிய முகமண்டபமும், அதனைச் சார்ந்து
மூலக்கோயிலைச் சூழ்ந்து சுற்றாலை மண்டபங்களும் அமைந்து
அக்கோயிலை மிகவும் இருளுடையதாக்கி விட்டது. இது
எல்லாக் கோயில்களிலும் உள்ள சாதாரண நிலை. நான் இக்கோயிலுக்குச்
சென்றது பகல்வேளை. அந்த நேரத்திலும் இக்கோயில் மிகமிக இருளடைந்து
காணப்பட்டது. மீண்டும் வெளியே வந்த போது, மறுபிறப்புப்
பிறந்தவன்போல உணர்ந்தேன். அவ்வளவு இருள் அடர்ந்து அச்சமாக
இருந்தது.