பக்கம் எண் :

68

68

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்


    

       ‘‘வழுவறு மரனும் மண்ணும் கல்லும்

       எழுதிய பாவையும்....’’

  

என்றும்,

  

         ‘‘மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்

         கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க’’

  

என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது.1

  

         நமது கோயில்களிலே சிற்பக் கலை பெரிதும் இடம்
பெற்றிருக்கிறது. சிற்பஉருவங்கள் அமையாத கோயிற் கட்டடங்கள் இல்லை
என்று கூறலாம். கோயிலின் தரை, சுவர், சிகரம், கோபுரம், மண்டபம்,
தூண்கள், வாயில் நிலைகள் முதலிய கட்டடங்களின் எல்லா இடங்களிலும்
சிற்ப உருவங்கள் அமைந்துள்ளன.

  

         காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாளிகைகளிலே, சுதையினால்
செய்யப்பட்ட சிற்பஉருவங்கள் அமைக்கப்பட்டிருந்ததை, இந்திர
விழாவின்போது அந்நகரத்துக்கு வந்த மக்கள் கண்டு களித்தனர் என்று
மணிமேகலை என்னும் நூல் கூறுகிறது. அப்பகுதி இது:

  

       ‘‘வம்ப மாக்கள் கம்பலை மூதூர்

       சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்

       மையறு படிவத்து வானவர் முதலா

       எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி

       வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய

       கண்கவர் ஓவியங் கண்டு நிற்குநரும்.’’2

  

  


1.  21ஆவது காதை.

2. மவர்வனம் புக்க காதை. 126-131