பக்கம் எண் :

அகத்திணைத் தோற்றம்101

சமுதாய இசைவு

     இன்பத்துறையில் அவரவர் விருப்பத்துக்கு இடனுண்டு எனவும், ஒருவர்
விருப்பத்தை வெளிப்படுத்தலின் களவுநெறி நன்னெறியே எனவும் தமிழ்ச்
சமுதாயம் ஒப்பியதோடு, அந்நெறிக்கு ஆதரவும் அளித்தது. “காதற்காமம்
காமத்துச் சிறந்தது” (பரி.9) என்று குன்றம்பூதனார் களவொழுக்கத்தின்
பெருமையை எடுத்துரைப்பர். ஆணும் பெண்ணும் விருப்பம் ஒத்துக்கூடும்
கூட்டம் (‘விருப்பு ஓரொத்தது மெய்யுறுபுணர்ச்சி’) என்று அதற்கு
ஏதுக்காட்டுவர். களவு நெறிக்கு இசைந்த நம் சமுதாயம் அந்நெறி வளர
வேண்டிய சூழ்நிலையையும் வகுத்து உதவிற்று. இளைஞர்கள் ஒன்று
குழுமுதற்கும், அவர்தம் தீரங்களை இளைஞியர் முன் அமர்ந்து காண்பதற்கும்
ஏற்ற மறவிழாக்கள் பல நிகழ்ந்தன. ஏறுகோள்விழா முல்லை நிலத்துப் பண்டு
கொண்டாடிய பெருவிழாவாகும். இஃது ஆண்டுதோறும் யாண்டும் நிகழும்.
இவ்விழாவில் முல்லைக்குமரியர்கள் உடன் வளர்ந்த காளையேறுகள்

விரட்டப்படும். கொன்றையும் காயாவும் வெட்சியும் பிடவும் தளவும் சூடி
முல்லைக் காதலர்கள் ஏறுபிடிக்கப் புறப்படுவர். முல்லை வரிசை போன்ற
பல்லும் குளிர்ந்த கண்ணும் பேதைச் சொல்லும் பொற்றோடும் கொண்ட
அழகியர் பரண்மேல் வீற்றிருந்து ஆரவாரஞ்செய்து விழாவிற்கு
உணர்ச்சியூட்டுவர். இங்ஙனம் காளையர் ஓடுங்காளையைச் சாடிப்
பிடிக்கும்போது, குமரியர் கூடியிருந்து காணும் வாய்ப்பினைப் பண்டைச்
சமுதாயம் நல்கிற்று.


    
பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்மார்
     முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
     பல்லர் பெருமழைக் கண்ணர் மடஞ்சேர்ந்த
     சொல்லர் சுடருங் கனங்குழைக் காதி னர்
     நல்லவர் கொண்டார் விடை             (கலி. 103)


     மைந்தரும் மகளிரும் விருப்பம்போல் பலர்காணத் தழுவிக்
கைகோத்தாடும் துணங்கைக் கூத்து முன்பு பெரு வழக்காக இருந்தது. ‘மள்ளர்
குழீஇய விழவு, மகளிர் தழீஇய துணங்கை’ என்பது குறுந்தொகை 31).
ஆடுவார் இறுகத்தழுவி ஆடுவது இக்கூத்தின் இயல்பாதலின், தழூஉ என்ற
ஒரு பெயர் (“துணங்கையஞ் சீர்த்தழூஉ” மதுரைக் காஞ்சி. 160) இதற்கு
ஏற்படலாயிற்று. எண்ணிறந்த விழாக்களும் ஆடல்களும் பாடல்களும்
வரிகளும் தமிழகத்துப் பொழிந்த ஏற்றத்தைச் சங்கப் பனுவல்களால்
அறிகின்றோம். இவையெல்லாம் இருபாலாரும் அடிக்கடி நெருங்கிப்
பழகுதற்கும், பழக்கம்
களவொழுக்கமாக வளர்தற்கும் வழிசெய்தன.
பெருத்தமழையில் பட்டமரம் தளிர்த்தாற்போல, முதியோர்க்கும் காதலுணர்வு
மழுங்காதிருந்தது. சிறானும், சிறாளும்கூடி விளையாடித் திரியும் குழந்தை
நட்பினை அற்றைச் சமுதாயம் தடுக்கவில்லை காண்.