செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயம் (புறம். 234) என்றும் புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் சிறுவர் கூட்டமும் சிறுமியர் கூட்டமும் கைபிணைந்து மெய்தழுவி விளையாடும் குழந்தைத் துணங்கையைக் குறிப்பிடுகின்றார். இவளும் இவனும் சிற்றில் இழைத்தும் சிறுபறையறைந்தும் விளையாடுபவ என்று இலக்கணர்கள் காட்டும் நடையில் மேலைத்தமிழ்ச் சமுதாய வழக்கம் புலப்படுதல் காண்க. ஊர்ப்பெண்கள் இளங் காதலர்களின் மறையொழுக்கத்தை அறவே கடிந்து ஒதுக்கார். அவர்தம் போக்கிற்கு இடையூறாய் நின்று விலக்கார். விலக்கினார்கள் என்று சொல்ல யாதொரு சான்றும் இல்லை. காதலர்களின் வரவு செலவுகளைக் கண்டுபிடித்து மகிழ்ந்து இன்புறுவது, இன்னவளுக்கு இன்னவனோடு தொடர்பு என்று பலரறியப் பேசிப் பரப்புவது, இவையே அலர்வாய்ப் பெண்களின் வேலையாகும். ‘ஊரார் துறைவற்கு என்னைப் பெண்டென மொழிப’ (ஐங். 112) என்று ஒரு தலைவி ஊர் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுவள். அலர் களவு நெறிக்கு என்றும் பகையாக வளர்ந்ததில்லை. காதலோர்களைப் பிரித்து உறவைக் கெடுக்க முயன்றதில்லை. பெண்ணின் உற்றார்க்கும் ஊரார் பிறர்க்கும் நம்மூர்க்கண் களவொன்று நடக்கின்றது என்பதனை அம்பலப் படுத்தும் நன்னோக்குடையதே அலராவது (அகம். 40). நும் மகள் விரும்பும் நம்பி இவனே, இனி மணங்காண்க என்ற அலர் பெற்றோர்க்குக் கலக்கமின்றி வழிகாட்டுகின்றது. தம் மகள் தேர்ந்த அம்மகன் பெற்றோர்க்குப் பிடிக்காதிருந்தாலும், என் செய்வது, ஊரறிந்த உறவிற்கு உடன்பட்டுத்தானே ஆகவேண்டும். எனவே பெற்றோர் திருமணத்திற்கு முறையான ஏற்பாடு செய்குவர். செய்யவே, களவைக் கற்பாற்றுப்படுத்திய அலரும், ஓடும் நெஞ்சு ஒரு நொடியில் நின்றது போல, தானே கூம்பி யொழியக் காண்கின்றோம். அலர்வாய்ப் பெண்டிர் நங்கையை மணப்படுத்தித் தம்மொடு ஒருத்தியாகக் கூட்டிக் கொண்டபின், அவருக்குப் பற்றுக்கோடு உண்டோ? அம்பலும் அலரும் தாங்கமாட்டாது அஞ்சிய இளங்குமரி இவ்வலரைக் காட்டிலும் பாலை வெயில் கொடுமையாமோ? தாங்கத்தக்க இனியதன்றே என்று கொழுநனோடு சுரம் போதலும் உண்டு. அப்போது, அலர் பொழிந்த அரிவையர்கள் இனிய பொருளைப் பறிகொடுத்தாற் போல வருந்தவும் இரங்கவும் காண்கின்றோம். “மனை மருண்டிருந்த என்னினும்..........ஊர் |