பக்கம் எண் :

168தமிழ்க்காதல்

தன் காதற்றன்மைக்கு இணங்கவே அவைகளைக் கருவியாக வணங்குகின்றாள்.
இதுவே தமிழ் நெஞ்சம்; இதுவே இயற்கையிலிருந்து பண்டைத் தமிழினம்
வளர்த்துக் கொண்ட வாழ்வெண்ணம்.


                               XIX

காதற் பார்வை

     உளவியல் அடிப்படை என்ற இம்மூன்றாவது தலைப்பில் நாம் கண்ட
முடிபு என்ன? தமிழினம் காதல் நோக்கிற்றான் இயற்கைக் கூறுகளை
அணுகிற்று. விலங்குகளின் பறவைகளின் காதற் செய்கைகளிடையே
தமிழ்மக்கள் தம் காதல் நினைவுகளைக் காண முயன்றனர். இயற்கைக்
காட்சிகள் பல திறத்தன. அஃறிணையுயிர்களின் செயல்களும் மிகப்பல.
எனினும் அவற்றுள் குடும்பத் தொடர்பான கருத்துக்களே தமிழினத்தின்
நெஞ்சத்தைக் கவர்ந்தன, கவரவல்ல வாயின.     

    முறியார் பெருங்கிளை யறிதல் அஞ்சிக்
    கறிவளர் அடுக்கத்திற் களவினிற் புணர்ந்த
    செம்முக மந்தி செல்குறி கருங்காற்
    பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
    குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன்
    புன்தலைப் பாறுமயிர் திருத்தும்         (நற். 151)

     மிளகுக்கொடி வளரும் மலைச்சாரலில் பெண்குரங்கு ஓர் ஆண்
குரங்கோடு களவொழுக்கம் நிகழ்த்தியது எனவும், அடையாளங்களால் தன்
மறைவொழுக்கத்தை மந்திச் சுற்றத்தார் அறியக்கூடாதே என்று மறைக்க
நினைத்தது எனவும், வேங்கை மரத்தின் கிளைமேலேறிக் கீழே கிடக்கும்
தெளிந்த சுனைநீரைக் கண்ணாடியாகக் கொண்டு, புணர்ச்சியால் குலைந்த தன்
தலைமயிரைச் சரிசெய்தது எனவும் கண்டு புலவர் இளநாகனார் பாடுகின்றார்;
மக்கட் செயலுக்கு முழுதும் ஒத்த மந்தியின் காதற்செயலை
அறிவுறுத்துகின்றார்; காதல் நிலையில் மறைக்கும் மனிதப் பண்பும் மந்தியின்
பண்பும் ஒன்றெனக் காட்டுகின்றார்.


     கடுந்தோட்கர வீரன் என்னும் சங்கப் புலவரும் உயர்திணைபோல்
அஃறிணையிலும் உயர்ந்த கற்பியல் நிகழ்வதைப் பாடுவர். ஆண் குரங்கு
வழக்கம்போல் மரந்தாவிச் செல்லும் சமயம் பிடி தவறி வீழ்ந்திறந்தது.
அன்புடைய மந்தி கைம்பெண்ணாய் வாழ விரும்பவில்லை. குட்டிகளை மரக்
கிளையில் விட்டுவிட்டு மலையேறி உயிர் விட்டது.