பக்கம் எண் :

170தமிழ்க்காதல்

செல்வன் புனைவு செய்வது அகப் புலவர்களின் நோக்கமன்று. உள்ளொன்று
வைத்து அதற்கிணையான புறமொன்று கூறுவர். கூறினும் அகத்தொடர்பான
உட்கருத்து மெய்யுள் உயிர்போல விளங்கிக் கிடக்கும்.     

     யாரினும் இனியன்; பேரன் பினனே
     உள்ளூர்க்கு குரீஇத் துள்ளுநடைச் சேவல்
     சூன்முதிர் பேடைக் கீனில் இழைஇயர்
     தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
     நாறா வெண்பூக் கொழுதும்
     யாணர் ஊரன் பாணன் வாயே    (குறுந். 85)

பரத்தையொழுக்கம் உடைய கணவனுக்குச் சார்பாக வாயில் வேண்டிப்
பாணன் வந்தான்; வந்தவனை மறுத்துத் தோழி கூறும்பாட்டு இது. தலைவனது
பேரன்பினை நகையாடுவள்; உன் வாயளவில் இனியன் என்று எள்ளுவள்.
‘தலைவனது உள்ளூரில் ஒரு குருவிக் குடும்பம் உண்டு. பெண் குருவி கரு
முதிர்ந்து ஈனும் நிலையில் உள்ளது. ஈனுதற்கு மெத்தென்ற சேக்கை
வேண்டும். துள்ளுநடை ஆண்குருவி சேக்கைக்கு வேண்டும் பொருள்களைத்
தேடிப் புறப்பட்டது. இனிய கரும்பினது வெண்பூக்களைக் கோதி வந்தது.
இத்தகைய இயற்கை நலம் மிக்கது. தலைவனது ஊர்’ என்று தோழி ஓர்
இயற்கையை, ஊரின் அடையாகத் தொடுத்து மொழிகின்றாள். ஊரில் பலவகை
இயற்கைகள் உண்டாதலின், புனைவு பலவாறு செய்யலாம். தோழி இனி
இயற்கை காட்டப்
புனைந்தாளா? உள்ளக்குறிப்பைக் காட்ட அதற்கேற்றபடி
ஓர் இயற்கையைப் புனைந்து கொண்டளா? அகப்பாடல்களில் இயற்கைப்
புனைவிற்கு உள்ளுறைப் பொருள் வேண்டும். உள்ளுறை தரும்
அகப்பாடல்களே மிகப் பல. அங்ஙனம் தாராத இயற்கைப் பாடல்கள்
அகத்துறைக்கண் சிறப்பில, வழுவமைதிப் படுவன. குருவிப்பெண்
கருவுற்றபோது குருவிக்கணவன் பரத்தை நாடி அலையவில்லை, அகலவில்லை.
கருவுயிர்ப்பிற்கு வேண்டும் பேற்றிடத்தைச் சமைக்கின்றது. அதற்குரிய
பொருளைத் தேடுதற்காகவே வெளிச்சென்று மீள்கின்றது. அஃறிணைக்
குடும்பத்தில் காணப்படும் ஆணின் கடமையுணர்வு இத்தகைத்து. இத்தகைய
நல் அஃறிணைகள் தலைவனது ஊரில் உள்ளன. இதனைக் கண்டும் தலைவன்
கடமையுணர்ச்சி பெற்றானல்லன். மனைவிக்குக் கருவூட்டினான்; கருவுற்றபின்
உற்றாளுக்கு உறுதுணையாகாமல் அகத்தை அறவே நீத்துப் போய்க்
கருவிலிகளின் இன்பத்தை நாடி அலைகின்றான். இவன்காதல் அன்பற்றது.
அறிவற்றது, பணியற்றது எனத் தோழி இடித்துரைக்கின்றாள்; இல்லறப்
பண்பின்மையைக் குறிப்பிற்புலப்படுத்துகின்றாள்; குருவிச்சுட்டு தலைவனது
உள்ளத்தைக் குத்துமன்றோ?