பக்கம் எண் :

அகத்திணை ஆராய்ச்சி19

பன்னிரண்டடி வரையுள்ள பாடல்களில் முதல் கரு உரி ஒத்தும்,
முப்பத்தொன்றடி வரையுள்ள பாடல்களில் முதல் கரு உரி விரிந்தும் நிற்றலை
மேலே விளக்கினோம். ஆதலின் முவ்வகைப் பொருளாட்சியே முவ்வகை
அடிக்கணக்கிற்கு ஏதுவாயிற்று என்பது என் துணிபு. இத்துணிபிற்கு எடுத்துக்
காட்டாக மூன்று தொகையிலிருந்தும் கபிலர் பாடல்களையே தருதும்:-


             
     குறுந்தொகை - 153

    
குன்றக் கூகை குழறினும் முன்றிற்
     பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
     அஞ்சுமன் அளித்தென் னெஞ்சம் இனியே

     ஆரிருட் கங்குல் அவர்வரிற்
5.    சாரல் நீளிடைச் செலவா னாதே.

               
    நற்றிணை-353

    
ஆளில் பெண்டிர் தாளிற் செய்த
     நுணங்குநுண் பனுவல் போலக் கணங்கொள
     ஆடுமழை தவழுங் கோடுயர் நெடுவரை
     முடமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்

     கல்லுழு குறவர் காதல் மடமகள்
     கருவிரல் மந்திக்கு வருவிருந் தயரும்
     வான்றோய் வெற்ப சான்றோ யல்லையெங்
     காமங் கனிவ தாயினும் யாமத்து
     இரும்புலி தொலைந்த பெருங்கை யானை
     வெஞ்சின வுருமின் உரறும்
11.   அஞ்சுவரு சிறுநெறி வருத லானே.


                   அகநானூறு - 80

    
ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கிற்
     கோடை யவ்வளி குழலிசை யாகப்
     பாடின் னருவிப் பனிநீ ரின்னிசை
     தோடமை முழவின் துதைகுர லாகக்
     கணக்கலை யிகுக்குங் கடுங்குரற் றூம்பொடு
     மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக
     இன்பல் லிமிழிசை கேட்டுக் கலிசிறந்து
     மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
     கழைவள ரடுக்கத் தியலி யாடுமயில்
     விழவுக்கள விறலியிற் றோன்று நாடன்