பக்கம் எண் :

20தமிழ்க்காதல்

     உருவ வல்விற் பற்றி யம்புதெரிந்து
     செருச்செய் யானை சென்னெறி வினாஅய்ப்
     புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
     மலர்தார் மார்பன் நின்றோர் கண்டோர்
     பலர்தில் வாழி தோழி யவருள்
     ஆரிருட் கங்கு லணையொடு பொருந்தி
     ஓர்யா னாகுவ தெவன்கொல்
18.   நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.


     திருக்குறட் காமத்துப்பால் அகப் பொருளைச் சங்கத் தொகை
நூல்களினும், நனி சுருங்கிய இரண்டடிகளால் கூறும். இச் சிறு வெள்ளடிகள்
முதற்பொருள் கருப்பொருள்களைச் சிறிது புனையவும் இடந்தாரா என்பது
வெளிப்படை. ஆகலின் திருவள்ளுவர் உரிப்பொருளே பொருளாகக்
காமத்துப்பாலை யாத்துள்ளார்.


        
      திருக்குறள்- காமத்துப்பால்

     கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
     என்ன பயனும் இல.                      (1100)

     கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
     ஒண்டொடி கண்ணே யுள.                 (1101)


     அகப்பாட்டின் அடி நீள நீள இயற்கைப் புனைவுக்கு இடமுண்டு
என்றும், அடி சுருங்கின் அப்புனைவு சுருங்கிப் போம் என்றும்
அடியாராய்ச்சியால் நாம் தெளிகின்றோம்.


     ஐங்குறு நூற்றுக்கும் கலித்தொகைக்கும் தனித்தனி ஐந்து புலவோர்

ஆசிரியர் ஆவர். இவ்விரு நூலும் குறிஞ்சித் திணை முல்லைத்திணை
மருதத்திணை நெய்தற்றிணை பாலைத்திணை என ஐவகை உட்பிரிவுகள்
திணையடிப்படையில் கொண்டவை. உருத்திரசன்மனார் தம் நுண்மதியால்
அகநானூற்றுக்கும் ஐவகைத் திணைப்பாங்கு வகுத்துத் தந்துள்ளார். ஐங்குறு
நூற்றுப் பாக்கள் 3-6 அடி யெல்லையன. இவ்வடிச் சிறுமையால், இந்நூலும்
குறுந்தொகை போல உரிப்பொருளையே சிறக்கப் பாடுகின்றதெனினும்,
குறுந்தொகைச் சுவைக்கு ஐங்குறுநூறு ஈடாகாது. குறுந்தொகை பலர் யாத்த
பாடலின் தொகுதி. வேறு வேறு காதற்றுறைகளின் மேல், இருநூற்றுக்கு
மேற்பட்ட புலவர்களின் அறிவுக்கூறு ஆங்குச் சுவைசெய்யக் காண்கின்றோம்.
அகநானூறு நற்றிணை குறுந்தொகை ஐந்குறுநூறு கலித்தொகை என்ற
அகத்தொகை ஐந்தினுள்ளும், ஐங்குறு நூற்றுக்குத்தான் தக்கார் ஒருவரால்
துறைகளும் நுண்மைகளும் நயம்படக் காட்டப்பட்டுள. அகவிலக்கியத்தை நாட
வேண்டும் நெறி யாது?