சொல்லும். வேற்றுப்பொருள் இதனகத்துச் சிறிதும் விரவவில்லை. பிற மூன்று பாட்டுக்களிலும் உரிப்பொருட் பகுதி குறைவாக வருதலின், அவ்வாசிரியர்கள் அகப்பொருளைத் தலைக்கீடாக வைத்துப் புறப்பொருளைச் சிறப்பித்தனர் என்று கொள்ளலாம். நெடுநல்வாடை அகப்பாட்டன்று என்பது நச்சினார்க்கினியர் முடிபு. இம்முடிபே இன்றுவரை புலவர்தம் வழக்காறாயிற்று. இது தவறுடைத்து என்றும், நெடுநல்வாடை மாசில் அகப்பாட்டே என்றும் ஆசிரியர் நக்கீரரை ஆராய்வுழி நிறுவியுள்ளேன். III பேராசிரியர் சீனிவாச அய்யங்கார் ‘தமிழ் வரலாறு, என்னும் ஆங்கிலப் பெருநூலில் அகப்பாடல்களை வரலாற்று நோக்கம்பட ஆராய்ந்தார். பதிப்பின் வேந்து டாக்டர்.உ.வே.சாமிநாதையார் தம் குறுந்தொகைப் பதிப்பில், அகப்பொருள் குறித்துஓர் இருபது பக்கம் கொண்ட நூலாராய்ச்சி காணப்படும். இவ்வாராய்ச்சி அகவிலக்கியமெல்லாம் தழுவிய நிறையுடையதன்று; குறுந்தொகையளவில் அமைந்த செறிவுடையது; எனினும், உ.வே.சா.வின் சங்கநூற்பதிப்பும் பிற நூற்பதிப்பும் எம்போலும் ஆய்வியல் மாணாக்கர்க்கு இத்துணைதான் பயன் சுரப்பன என்று அளவிட்டுரைக்க முடியுமா? பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளையின் ‘பழந்தமிழர் நாகரிகம்‘ புலவர் இளவழகனாரின் ‘பண்டைத் தமிழரின் இன்பியல் வாழ்க்கை’ என்ற நூல்கள் அகத்திணை பற்றியன எனினும், இடைக்காலத்தில் திருக்கோவைப் பாடல்களை விளக்கிப்போம் அளவில் அமைந்தன. டாக்டர். மு.வரதராசனார் நெடுந்தொகை விருந்து குறுந்தொகை விருந்து என்பது போன்ற தலைப்பு நிலையில் ஒழுங்குற எழுதிய நூல்கள் பல. இவையும் ஒவ்வொரு தொகைநூல் அளவில் நின்ற ஆராய்ச்சி என்பது பெயர் தன்னானே விளங்கும். கலித்தொகைச் சொற்பொழிவுகள், அகநானூற்றுச் சொற்பொழிவுகள், ஐங்குறுநூற்றுச் சொற்பொழிவுகள் என்ற வகையில் பல்லோர் ஆற்றிய பல பொழிவுகள் தொகுப்பாய் நூல்வடிவம் பெற்றுள. இவ்வெல்லாம் சங்கப் பனுவல்களை எளிமை செய்து மக்களிடைப் பரப்பும் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் தோன்றிய பொது வெளியீடுகள் ஆராய்ச்சியொளி ஆங்காங்கு மின்னும். எல்லா அகத் தொகைகளுக்கும் இப்பொழிவுகள் உளவேனும், திணை துறை புலவர் என்ற எவ்வகையான் நோக்கினும் அவை சால்புடையன அல்ல. ஒவ்வொரு தொகையையும் பிரிவு பலவாக்கிக் கொண்டு பேசினோர் மிகப் பலராவர் என்பது நினைவுகூரத் தகும். அகத்திணை மேலவாய் இதுகாறும் முன்னையோர்எழுதியவை ஆராய்ச்சி முற்றா எனினும், அவற்றிடைக்கண்ட ஒளிச் சிதறல்கள் சில; என் அறிவினைக் கிளறிய கருத்துக் கருவிகள் சில; வழுவற்க |