பக்கம் எண் :

அகத்திணை ஆராய்ச்சி23

என்று துணிவோட்டம் தந்த வழுக்கிடங்கள் சில. இவற்றை அடிக்குறிப்பிற்
காணலாம். ஆராய்ச்சி முன்னோடிகளுக்குப் பின்னோடிகள் எவ்வகைப்
புதுமைக்கும் கடப்பாடுடையர். எனைத்தானும் அகத்திணையை
ஆராய்ந்தார்க்கெல்லாம் நன்றியன்.


     உயர்ந்த பதிப்புக்களால் தமிழ்த் தொண்டு ஆற்றிவரும் சைவசித்தாந்த
மகா சமாசம் எட்டுத்தொகை பத்துப் பாட்டுக்களைச் ‘சங்க இலக்கியம்’
என்னும் பெயரால், ஒரு பெருந்தொகையாக்கி 1940இல் வெளியிட்ட அடக்க
மூலப் பதிப்பு ஆராய்ச்சிப் பெருஞ்சாலைக்கு ஒரு கைகாட்டி. இப்பதிப்பகத்துச்
சங்கப் புலவர்கள் அகரவரிசையாக அமர்ந்துள்ளனர்; பலதொகையினும்
புக்குக்கிடந்த ஒருவர்தம் பாடல்கள் அவர் பெயரின்கீழ் ஒருங்கு
சேர்ந்துள்ளன. பழம் புலவரைப் பற்றிய திறனாய்வுக்கு இப்பதிப்பு இணையற்ற
வழித் துணை. அகத்திணையின் முழுத் திறங்காண இதுபோன்ற பல்வகைப்
பதிப்புகள் வேண்டும் என ஆய்வுக்கிடையே எனக்குப்பட்டது.
குறிஞ்சித்திணை முல்லைத்திணை என்றாங்கு, திணைத் தலைப்புக்கொண்டு
பாடல் தொகுத்த திணைப்பதிப்புக்கள் என்ன, துறை நோக்கம்பட ஒரு
திணைக்கு அமைந்த பாக்களையெல்லாம் ஓரிடப்படுத்திய துறைப் பதிப்புக்கள்
என்ன, தலைவன் தலைவி தோழி எனக் கூற்றுக்கள் அடிப்படையில்
ஒருவர்க்கு உரிய செய்யுளெல்லாம் ஒருங்கு தொக்க கிளவிப் பதிப்புக்கள்
என்ன ஆக்கப்
பதிப்பீடுகள்வரின், பதிப்பேருழவர்கள் பல்குவர்;
ஆராய்ச்சிவளம் பெருகும்.


                         IV


     ஒரு நூலின் செல்நெறியறிந்து கற்குங்காலை கற்பார்க்கு ஆசிரியன்
கண்ட புதிய உண்மைகளின் வன்மையும் வரம்பிகவாத் திண்மையும் விளங்கித்
தோன்றும். சிலவற்றை விரித்துச் சொல்லுவானேன், சிலவற்றைச் சுருக்கிச்
சொல்லுவானேன், சிலவற்றைச் சொல்லாதே விடுப்பானேன் என்ற கூறுகள்
தெளிவாகும். நாட்பட்ட கருத்தாயிற்றே, பலர் கட்டிய கருத்துக்கெல்லாம்
அடித்தளமாயிற்றே என்று மலையாது அடிதொட்டு ஆராய்ந்த ஆழம்
புலப்படும். பின் வரும் ஆய்நெறிகள் என் நூலைக்கற்கும் அன்பர்களின்
நினைவுக்குரியவை.


1.    சங்க இலக்கியத்து அகத்திணை பற்றிய 1862 பாடல்கள் அனைத்தையும்
     ஒரு சேர வைத்து ஆராய்ச்சிக்கு மேற்கொண்டதூஉம் இதுவே
     முதன்முறை. அவ்வனைத்தும் ஒருவரால் ஆராயப்படுவதூஉம் இதுவே
     முதன்முறை. ஆதலின் எனது ஆராய்ச்சி பரப்பால் முழு நோக்கும்
     பார்வையால் ஒருநோக்கும் செலுத்தப்பெற்றது.