பதினான்கு திணைப்பகுப்பு, முதல் கரு உரி என்ற பாடலமைப்பு, அகத்தும் புறத்தும் வரூஉம் பன்னூறு துறைவகை எல்லாம் ஒரு தனிமகனது எண்ணம் என்றும், குறியீட்டுச் சொற்கள் எல்லாம் அவ்வொருவனது ஆக்கம் என்றும் கூறுதல், மிகையினும் மிகை. எழுதிணை யென்ப, என்மனார் புலவர், குறியறிந்தோரே, களவென மொழிப, கரணம் என்ப என வரும் தொல்காப்பியத் தொடர்கள் பலப்பல. இப்பன்மை நடையால் இவ்விதிகளை இயற்றிய சான்றோர் பலர் என்று தெரியலாம். II அகப்பொருளின் மென்மை அகத்திணைக்கண் பேரழுகை பேரச்சம் பெருமருட்கை என்றினைய சுவைப்பாங்குக்கு இடமின்று. யமன் வரவுக்கு இடங்கொடாத இன்சுவை இலக்கியம் அகத்திணை. அத்திணை மாந்தர் யாரும் நீடுவாழ்தலன்றிச் சாவுறுதல் இலர். இழவு புகா ஓரிலக்கியத்தை தமிழினம் படைத்ததெனின், அதனைச் சாதற்கு அஞ்சிய இனம் என்று மொழியலாமா? இல்லை, இல்லை; உயிரீயும் இனம் என்று பறைசாற்றுங்காண். பக்கத்துப் புறத்திணை, பல்லாற்றானும் பாங்கரும் சிறப்புடைய உயிரென்ன, உடலென்ன, பொருளென்ன உடைமையனைத்தையும் ஒருங்கீவது. அறவே துறப்பது தமிழினம்! துறக்கவேண்டுவது தமிழ் நெஞ்சம் என்னும் தமிழியத்தைப் புறத்திணை அறிவுறுத்துகின்றது. வளியா அறியா உயிர்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆயமகள் தோள் விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர் கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் (கலி. 103) உயிராவது சிறு காற்று; அதனை அப்படிக் கருதுவதை விட்டுப் பெரிதென மதித்து ஏற்றை மடக்க அஞ்சுவானாயின், அவனுக்கு இடைமகள் தோள் கிடைக்குங்கொல்? கிடைப்பது யார்க்கு? காதலியின் மார்புக்கு இடையே விரும்பி வீழ்வதுபோல, ஆனேற்றின் கூரிய இரு கொம்புக் கிடையே வீழ்பவன்தான் விலையின்றி ஆயமகளைப் பெறுவான் என்பது ஆய்க்குல மடந்தையின் அறிவிப்பு. ஒரு நாட்டுப் பெண்கள் காதலுக்கு வாயிலாக ஆடவர் பால் எத்திறத்தினைக் காண விழைகின்றனர், அத்திறனைத் தான் ஆணினம் வளர்த்துக்கொள்ள முந்தும். வில்லோன் காலன கழலே (குறுந். 7) சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே (குறுந். 15) |