பக்கம் எண் :

அகத்திணைப் பாட்டு247

மொழிச் சங்கம் கண்டனராயின், அம் மொழியின் தோற்றத்தையும்
தொன்மையையும் அளந்தறிவார் யார்? அளந்தறிய இயலுங்கொல்? மூன்று
தமிழ்ச் சங்கங்கள், அவற்றின் நிலைபேற்றுக் காலங்கள், நிறுவிய மூதூர்கள்,
புலவர்தம் தொகை, புரவலர்தம் தொகை, எழுந்த பன்னூல்கள் என்றிவை
பற்றிய குறிப்புக்களை இறையனார் அகப்பொருளுரை காத்து நல்குகின்றது.
அவ்வுரைக் காப்பினால் தமிழ் வரலாறு ஒளியுடையதாக இலங்குகின்றது.
தலைசான்ற சங்க வரலாற்றினைத் தாங்கி நிற்கும் அவ்வுரை, அகப்பொருட்
குறையுடையதாயினும் வாழ்க, பெருமித வழி காட்டியாகுக. முச்சங்கங்கள்
நிலவிநின்ற கூட்டாண்டுகள் 9990, புலவர்களின் கூட்டுத்தொகை 8598,
என்றினைய பேரெண்ணிக்கைகளைப் பார்த்து, சங்கம் இருத்திருக்குமோ என
ஐயப்படும் ஆய்வாளர்கள் உளர். இவ்வெண்ணிக்கையில் மிகை
குறையிருக்கலாம் என்று ஒத்துக்கொண்டு, சங்கம் இருந்தமைக்குச் சான்று பல
காட்டுவார் பலர். மேலும் ஒரு பொய்யாச் சான்றினை அகத்திணை
அளிக்கின்றது.


     அகத்திணைப் படைப்பு இயற்கையிலிருந்து வனப்பொடு வடித்த
செயற்கை. இப்படையைக் காண்பதற்கு அறிஞர் குழு வேண்டும். அக்குழுவில்
நானிலப் புலவர்களும் சமுதாயத்தின் பல்வேறு பெருமக்களும் இருந்திருத்தல்
வேண்டும், நிலப் பாடல்களையும், நாடோடிப் பொதுப்பாடல்களையும்,
தமிழகம்
எங்கணும் பரவி பழக்க வழக்கங்களையும், திணைக்குரிய தனி
ஒழுகலாறுகளையும் எல்லாம் அக்குழு ஒருசேரக் கொண்டு நாடித்
தெளிந்திருக்க வேண்டும். உயர்ந்த கவிதை காலங்கடந்தது என்பர் செல்லியார்.
1‘அன்ன கவிதைக்குப் பொருளும் காலங்கடந்ததால் வேண்டும். அன்பான
காதலைப் போலப் பண்பான பரந்த தூய ஆற்றலான பொருள் பிறிதுண்டோ?
“யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறம். 192) என்பது தமிழியம். ஞாலத்தின்
மக்கள் மன்பத்தைக்கே வாழ்விலக்கியம் அருள நினைத்த தமிழ்ச் சங்கத்தார்
காமக்காதலை அகப்பொருட் படுத்தியது இயல்பினும் இயல்பே.


     அகத்திணை ஒரு தனியறிஞன் படைப்பன்று. ஒருவன் படைப்பாயின்,
வழிவழி மக்களால் அஃது உடைபட்டிருக்கும். காலந்தோறும் தோன்றிச் சிறந்த
அறிஞர்கள் ஒருவனது இலக்கியப் படைப்பைப் பின்பற்றியிரார். அகநூற்கண்
இன்ன காதற்பகுதி வரலாம், வரலாகாது என்று பொருள் வரம்பு செய்தலும்,
அப்பொருளை இன்னவாறு பாடுக என்று முன்வரம்பு செய்தலும், சான்றோர்
பேரவையாலன்றி இயலா. பேரவை அகத்திணை கண்டமையாற்றான்
பின்வந்தோர் எல்லாம் அகவிதிகளைப் பிறழாது பின் பற்றினர்; புதிய
விதிகளை அகமெனப் புகுத்த நினைத்திலர். அகம் புறம் என்ற இரு
பொருட்பகுப்பு, கைக்கிளை பெருந்திணை ஐந்திணை வெட்சி வஞ்சி நொச்சி
முதலான

 ____________________________________________________
     A Defence of Poetry. p.41