பக்கம் எண் :

246

                    5. அகத்திணைப் பாட்டு

     அகத்திணையின் பாகுபாடு தோற்றம் குறிக்கோள் பற்றிய
கருத்துரைகளையும் தெளிவுரைகளையும் சங்கப் பாடல்கள் சான்றாக
முன்னியல்களிற் கற்றோம். அகம் என்னும் சொல் இருகூறு தழுவியது. ஒன்று
பொருள் பற்றியது. அகப்பொருள் தேர்வுடையது வரம்புடையது
தனிமையுடையது ஞால நோக்குடையது என்று முன்னர் அறிந்தோம்.
ஏனைக்கூறு இலக்கியமுறை. இம்முறையினை இவ்வியலிற் காண்போம்.
பல்வேறு காதல்களிலிருந்து அகப் பொருளென ஒன்றை வடித்துக்கொண்ட
மூதறிவினோர், பல்வேறு இலக்கிய முறைகளிலிருந்து அகமுறையெனவும்
ஒன்றை நுண்ணிதாகக் கண்டுகொண்டனர். அகப்பொருளும் அகமுறையும்
உள்ளங்கை புறங்கைபோல் நீங்ககில்லாத் தொடர்பினவை. ஒரு காதற்பாட்டு
பொருளிற் சிறிது குன்றினாலோ, முறையிற் சிறிது குன்றினாலோ
அகத்திணையாகாது என்று தள்ளப்படும்.


தமிழ்ச் சங்கம்

     அக முறையை ஓர்தற்கு முன், தமிழகத் தமிழினத் தமிழ் மொழி
வரலாற்றில் நிகழ்ந்த ஓர் அருஞ்செயலை நாம் ஈண்டுக் குறிப்பிடவேண்டும்.
அதுதான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிக்கென ஒரு சங்கம்

கண்டமை. அது ஒரு மொழிப்பேரவையாயினும், மொழிவளத்தால், இனமும்
நாடும் வளரும் அன்றோ? வளரக் காணுதும் அன்றோ? ஆயிரமாயிரம்
ஆண்டுகட்கு முன்னே