பக்கம் எண் :

அகத்திணைப் பாட்டு251

இவற்றைத் தனியொருவர் பெயர் காட்டிப் புலவர்கள் பாடார் என்பது
இந்நூற்பாவின் பொருள். தலைவன் பாங்கன் பாகன் பாணன் தகப்பன்
அண்ணன்மார் என்றும், தலைவி தோழி செவிலிதாய் பரத்தை ஊரார் எனவும்
ஐந்திணைக்கண் ஆண் பெண் மாந்தர்கள் வருவர். இவ்வாட்களைத் தலைவன்
தலைவி தோழி என உறவுப் பெயராற் கூறலாம்; நாடன், துறைவன் ஊரன்
என நிலப் பெயராற் கூறலாம்; உழவன் உழத்தி ஆயன் ஆய்ச்சி எனத்
தொழியிற்பெயராற் கூறலாம்; ஆடவன் நம்பி சிறுமி நங்கை எனப்
பாற்பெயராற் கூறலாம்; அவன் அவள் அவரெனச் சுட்டுப் பெயராற் கூறலாம்.
இவ்வாறு யார்க்கும் ஏற்கும் பொதுமையாகக் கூறுதலன்றி, இட்டு வழங்கும்
பெயர்களாற் கூறுதல் ஆகாது, காவிரிப்பூம்பட்டினத்து மாசாத்துவான் மகன்
கோவலன் என்பான் மாநாய்கன் மகள் கண்ணகியைக் காதலித்தான்,
மணந்தான், பின்னர் கணிகைகுல மாதவியை நாடினான் என்றவாறு
இயற்பெயரோடு மொழியலாகாது என்பது அகமுறை. இம்முறையை விடுத்துக்
கூப்பிடு பெயர் சுட்டிக் காதல் புனையப்படுமாயின், அக் காதல் எத்துணைச்
சிறந்ததாயினும், அகத்திணைப்பாற் படாது என்பது இலக்கணத் துணிபு. சங்க
நூலில் உள்ள 1862
அகப்பாடல்களிலும் காதலாட்களுக்கு,
கிளவிமாந்தர்களுக்கு இயற் பெயர் இல்லை என்பதை அறிக.


     மேலை நூற்பாவில் ஐந்திணையில் ஒருவர் பெயர் சுட்டிவரல் கூடாது
என்று இருத்தலின், பிற பிரிவுகளான கைக்கிளை பெருந்திணைகளில் பெயர்
வரலாம் என்று ஊகிக்கத் தோன்றும்; எனினும் அவ்வூகம் பிழையானது,
ஐந்திணை துறைகள் பல கொண்டது. கோவைபோலும் காதல் நிகழ்ச்சிகள்
அமைந்தது. ஆதலின் பெயர் சுட்டிப் பாடும் ஓராசை யார்க்கும் ஏற்படும்.
எனவே பெயர் வரலாகாது என்று தனியொரு நூற்பாவில் ஐந்திணைக்கு
விதிசெய்தார். கைக்கிளைக்கோ துறையொன்று, பெருந்திணைக்கோ துறை
நான்கு. பெருந்திணைதானும் ஐந்திணை நிகழ்ச்சிகளின் மிகை.
இச்சிறுபான்மையால், இவ்விருதிணைக் கண்ணும் பெயர் சுட்டற்க என்று
தனிநூற்பா யாத்திலர். “ஐந்திணையும்” என்ற எச்சவும்மையால்,
ஏனையிரண்டையும் கொள்ள வைத்தார் என்று அறிக. பெரிய
ஐந்திணையாகுக, சிறியகைக்கிளை பெருந்திணையாகுக, அகத்திணைக்கண்
காதல் மாந்தர்களுக்குப் பெயர் இயல்பாகவோ கற்பனையாகவோ இல்லை
என்பதுவே அகப்பொதுவிலக்கணம். இதற்குப் பின்வரும் நூற்பா சாலும்
சான்று.     

     புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது
     அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே    (தொல். 1000)

     பெயர் புறத்திணையில் வந்தாலும் வரலாம்; அகத்திணையில்
வருதலாகாது என்று தொல்காப்பியர் கூறும் முடிவு. நூற்பாவில் எழுதிணையும்
அடங்க, “அகத்திணை மருங்கின்” என்று பொதுச்