சொல்லாற் கூறுதலைக் குறிக்கொள்க. “அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வரும்” என்பது இளம்பூரண விளக்கம். இதனால் அகத்திணை பெயர் அறிவாராப் பண்புத்திணை என்பது தெளிவு. இயற்பெயர் கூறா நோக்கம் தனி ஒருவன் அல்லது தனி ஒருத்தியின் நல்ல தீய காதற் களங்களை யெல்லாம் வரன்முறையாகத் தொகுத்து மொழிவது அகத்திணையில்லை. சமுதாயத்து எல்லா மாந்தரிடமும் நிகழும் பல்வேறு காதல் நிகழ்ச்சிகளில், நல்லன என்று தேர்ந்து மேற்கொண்ட தனிக் காதல் ஒழுக்கங்களைப் புனையும் வரம்பு உடையது அகத்திணை என்று அறிவோம்.1 காதல் வாழ்விலிருந்து தோன்றாமல், சமுதாயத்தின் பலர் ஆண் பெண் பெயரிட்டுக் கூறுதல் பொருந்தாதன்றோ? கூறின், தோன்றிய சமுதாய நிலைக் களம் புலனாகாதன்றோ? தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவுகின்றோம். ஒருவர் நன்கொடை முற்றும் அளிப்பின், அக்கொடைஞன் பெயர் கூறலாம், பளிங்கிற் பொறிக்கலாம், உருவம் திறக்கலாம், தமிழ் மக்கள் எல்லோரும் தத்தமக்கு ஒல்லும் சிறுதொகையை அளித்திருப்பாராயின், நன்கொடையாளரென யார் பெயரை மொழிவது? எனவே, தமிழ்ப் பல்கலைக்கழகம் மக்கள் எடுத்தது என்று அழைப்போம். அதுபோல்வது அகத்திணை. ஆதலின், “மக்கள் நுதலிய அகன்” என்றார் தொல்காப்பியர்; சமுதாயத் தோற்றமும் சமுதாய நோக்கமும் காட்டினார். அகப்பொருளின் கிடக்கை பொதுவாதலின், அகச்செய்யுளும் சமுதாயம் சுட்டும் பொதுப் பெயரால் அமையலாகாது என்று இலக்கிய முறை, பாடல் வரம்பு, வகுத்தரைத்தனர் என்க. ஈண்டுச் சில வினாக்கள். அகத்திணைக் காதல் நிகழ்வுகள் பல்லோர்தம் வாழ்க்கையில் காணுபவை யாதலின், கோவையாகத் தொடுத்தலும், ஒருவர் பெயர் வைத்து மொழிதலும் கூடா என்பது சரி. தனி நிகழ்ச்சிகள் என்பதை ஒப்புகின்றோம்; அகப்பாட்டு தனிப்பாட்டு என்பதை உடன்படுகின்றோம்; எனினும் தனியியற்கைக் கேற்பப் பாடல்தோறும் வெவ்வேறு தனிப்பெயர்கள் வந்தால் என்ன? வேறுவேறு ஆண் பெண் இயற்பெயர்களை ஆண்டால் என்? முற்றும் பெயர் ஒழித்து அகம் பாடுவதைக் காட்டிலும், பல பெயர்கள் வரப் பாடின், மக்கள் நுதலியது, சமுதாயச்சுட்டு, வாழ்வில் உள்ளது என்பன தெளிவாக அறியப்படுமன்றோ? ஆதலின், மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப் பெறுவர் ___________________________________________________ Cf. Prof. T. P. M.: The Theory of Poetry in Tolkappiyam: in Tamil Culture, Vol. I; No.2. |