V நுண்ணிலக்கியம் இலக்கிய மாந்தர்கட்குப் பெயர் சுட்டுவது பற்றிச் சிந்தனை செய்த பிற நாட்டு அறிஞர்களும் உளர்.அரித்தாட்டில் வரலாற்றாளனுக்கும் கவிஞனுக்கும் உரிய பொருள் வேறுபாட்டை ஆராய்கின்றார். “வரலாற்றைக் காட்டிலும் கவிதை மிக்க மெய்த்தன்மையும் ஆழ்ந்த கருத்தும் உடையது. கவிதை சொல்லுவன ஞால மயமானவை. வரலாறு கூறுபவை தனிநிலை சார்ந்தவை. ஞாலமயம் என்பதன் கருத்து என்ன? இலக்கியத்தில் வரும் ஆட்களுக்கு இயற்பெயர்கள் இருந்தாலும் (அப்பெயர்களுக்கு மதிப்பில்லை). இன்ன பண்புடைய மனிதன் இப்படி நடப்பான், பேசுவான் என்று தன்மை நிலை காட்டுவதே கவிதை நோக்கம்” என்பது அரித்தாட்டில் விளக்கம்1. கவிதைக் கலையையும் கவிஞனையும் குற்றச்சாட்டு நீக்கிக் காக்கமுனைந்த சர் பிலிப்புச் சித்தினி கவிதையின் ஓம்படை என்னும் நூல் எழுதினார். புலவன் தான் புனையும் மாந்தர்களுக்குப் பெயர் வைத்து உண்மைபோலக் காட்டி ஏய்க்கின்றான் ஆதலின் கவிதை பொய்ம்மையுடையது என்பது ஒரு குற்றச்சாட்டு. அதனை மறுக்கப் புகும் சித்தினியார் “பெயர் வைப்பது வரலாற்று நோக்கமன்று; காட்சிகளை உணர்ச்சிப்படுத்துவதற்கே. மனிதர்களைப் புனையுங் கால், பெயரின்றி விட முடியாது” என்று காரணங் காட்டுவர்2. உலகம் நோக்கிய இலக்கியங்களில் மக்கட்பெயர்கள் வரினும் அவை வழக்கு மாத்திரையேயன்றி வேறு பயனில்லை. மதிப்பில்லை என்பது இவ்வெழுத்தாளர்களின் முடிபு. பெயரின்றி இலக்கியம் தோன்ற முடியாதா? மாந்தர்களைப் புனையமுடியாதா? என்று இவர்கள் சிந்திக்கவில்லை. ஏன்? இன்னவர்கள் கற்றறிந்த இலக்கியமெல்லாம் பெயர் கொண்ட மாந்தர்களைப் பேசுபவை. சாத்தன் கொற்றனுடைய பழக்கடைக்குச் சென்றான்; 10 மாம்பழங்கள் 5 ரூபாய்க்கு வாங்கினான்; நான்கினை மூன்று ரூபாய்க்குப் பூதனுக்கு விற்றான் என்று பெயர்கள் சுட்டிக் ____________________________________________________ “By a Universal statement, I meen one as to what such or such a kind of man will probably or necessarily say or do- which is the aim of poetry, through it affixes proper nampes to the Characters.” - Aristotle on the Art of Poetry, p.43 “Their naming of men is but to make their picture the more lively, and not to build any history: painting men, they cannot leave men nameless ___________ The Poet nameth Cyrus of Aeneas no other way than to show what men of their fames, fortunes and estates should do.” - by sir Philip Sidney: An Apologie for Poetry, p. 36 |